மிகப்பெரும் விலைக்கு ஏலம் போன அர்னால்டின் கைக்கடிகாரம்


மிகப்பெரும் விலைக்கு ஏலம் போன அர்னால்டின் கைக்கடிகாரம்
x

இந்த கைக்கடிகாரம் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மற்றும் தனது நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். 76 வயதான இவர் கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருந்துள்ளார்.

இவர், தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை மாசுபாடுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நன்கொடையாக அளிக்கவுள்ளதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி, அர்னால்ட் பயன்படுத்திய பொருட்களுக்கான ஏலம் ஆஸ்திரியாவில் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட் எனும் புகழ் பெற்ற தங்கும் விடுதியில் நடைபெற்றது. இதில் அர்னால்டின் கைக்கடிகாரம் சுமார் ரூ.2 கோடி 45 லட்சம் (2,70,000 யூரோ) தொகைக்கு ஏலம் போனது.

ஆடிமார்ஸ் பிக்கெட் எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர் ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கைக்கடிகாரம், சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையதாகும்.

அப்போது அங்கு நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய அர்னால்ட், "உலகளவில் மாசுபாடு குறித்து நடைபெறும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நான் பார்க்கிறேன். நாம் இந்த விஷயத்தில் நீண்ட தூரம் வந்து விட்டோம். தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வு காண பலர் முன் வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மாசுபாட்டிற்கு எதிரான என் போராட்டத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார். இந்த ஏல நிகழ்ச்சியில் மொத்தம் 1.31 மில்லியன் யூரோ வசூலானது குறிப்பிடத்தக்கது.


Next Story