சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி தீ வைத்து எரித்த பயங்கரவாதிகள்; 19 பேர் உடல் கருகி சாவு


சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி தீ வைத்து எரித்த பயங்கரவாதிகள்; 19 பேர் உடல் கருகி சாவு
x

Image Courtesy: AFP

சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி தீ வைத்து பயங்கரவாதிகள் எரித்தனர்.

சோமாலியாவில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வரும் இவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய பகுதியில் உள்ள ஹிரான் மாகாணத்தில் பெலெட்வேய்ன் மற்றும் மாக்சாஸ் நகரங்களுக்கு இடையே உள்ள சாலையில் வாகனங்கள் பல சென்று கொண்டிருந்தன.

அப்போது அங்கு வந்த அல் ஷபாப் பயங்கரவாதிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி தீ வைத்தனர். இப்படி கார், லாரி உள்பட 8 வாகனங்களை தீ வைத்து விட்டு பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். இதில் 8 வாகனங்களும் முழுவதுமாக தீயில் கருகி உருக்குலைந்து போயின. இந்த கோர சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.


Next Story