சாட் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு: 60க்கும் மேற்பட்டோர் பலி!


சாட் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு: 60க்கும் மேற்பட்டோர் பலி!
x

Image Credit:AP

தினத்தந்தி 21 Oct 2022 7:44 AM GMT (Updated: 2022-10-21T13:19:02+05:30)

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசில், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஜாமெனா,

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நைஜீரியாவின் அண்டை நாடான, சாட் நாட்டில் கடந்த ஆண்டு, போர்க்களத்தில் சாடியன் படைகளை பார்வையிட சென்ற போது அப்போதைய அதிபர் இட்ரிஸ் டெபி இட்னோ கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபர் பதவியில் இருந்த தனது தந்தையின் படுகொலையை தொடர்ந்து, மஹமத் இட்ரிஸ் டெபி கடந்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்ற மஹமத் இட்ரிஸ் டெபியின் பதவிக்காலம் இரண்டு வருடம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர் பொறுப்பேற்ற பின் நடைபெறும் அரசாங்கத்திற்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் இதுவாகும்.போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை மக்கள் மீது வீசினர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறினர் மற்றும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பின்னர் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், போராட்டக்காரர்கள் சம்பவ இடத்திலிருந்து ஓடினர். தலைநகர் ஜாமெனாவில் 30 பேர் உயிரிழந்ததாக சாடியன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அஜிஸ் மஹமத் சலே தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களில் சாட் நாட்டின் பத்திரிக்கையாளரான நர்சிஸ் ஓரேட்ஜேவும் ஒருவர் ஆவார்.வன்முறையை அடுத்து அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர்.

சாட் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மவுண்டோவில் 32 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டோனா மற்றும் சாரா நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


Next Story