சிங்கப்பூருக்கு கஞ்சா கடத்த முயற்சி; இந்திய வம்சாவளி நபருக்கு நாளை மரண தண்டனை


சிங்கப்பூருக்கு கஞ்சா கடத்த முயற்சி; இந்திய வம்சாவளி நபருக்கு நாளை மரண தண்டனை
x

சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல்காரர்கள் இருவரை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், 2014-ம் ஆண்டு தங்கராஜ் சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவருடன் இந்தியாவை சேர்ந்தவரான இவருக்கு தொடர்பு உள்ளது என்ற அடிப்படையில் தங்கராஜையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் கைதின்போது தங்கராஜ் உடன் இல்லை. தங்கராஜிடம் இருந்து போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என பரவலாக கூறப்படுகிறது.

எனினும், 2018-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி தங்கராஜுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்த முயன்றுள்ளார் என்ற வழக்கில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த தண்டனை புதன்கிழமை (நாளை) நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கு எதிராக மரண தண்டனை ஒழிப்புக்கான பிரசாரகர்கள் அரசிடம் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தும், தண்டனையை நிறுத்தி வைக்கவும் கோரி வருகின்றனர். ஆனால், அதனை அரசு புறந்தள்ளி உள்ளது.

இங்கிலாந்து கோடீசுவரர் பிரான்சன், தங்கராஜ் மரணத்திற்கு தகுதியானவர் இல்லை என்றும் அப்பாவியை சிங்கப்பூர் அரசு கொல்ல இருக்கிறது என்றும் தனது பிளாக் பதிவில் தெரிவித்து உள்ளார். இதற்கு சிங்கப்பூர் உள்விவகார அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுதவிர, ஐரோப்பிய கூட்டமைப்பு குழு மற்றும் ஆஸ்திரேலிய எம்.பி. கிரஹாம் பெர்ரட் உள்ளிட்டோரும் தண்டனையை குறைக்க கோரி அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இதுபற்றிய வழக்கில் தங்கராஜின் தொலைபேசி எண்கள் மற்ற 2 பேருடன் தொடர்பு கொள்ள பயன்பட்டு உள்ளது என்று சிங்கப்பூர் உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. தங்கராஜ் கஞ்சா கடத்தும் நோக்கத்துடன் இருந்து உள்ளார் என்று ஐகோர்ட்டும் தெரிவித்து உள்ளது.

போதை பொருள் பயன்பாட்டை எதிர்கொள்ள பூஜ்ய சகிப்பு தன்மையை சிங்கப்பூர் அரசு கொண்டுள்ளது என்று சிங்கப்பூர் உள்விவகார அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்க மரண தண்டனையானது, சிங்கப்பூர் குற்ற நீதி நடைமுறையில் ஒரு முக்கிய விசயம் ஆக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரில் 87 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர் என அந்நாட்டு சட்ட மற்றும் உள்விவகார மந்திரி சண்முகம் தெரிவித்து உள்ளார்.

தங்கராஜுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்ற சூழலில், போலீசார் கூறும் அறிக்கையை அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது என்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தூக்கு தண்டனை நிறைவேற்றும் அறைக்கு தங்கராஜை அழைத்து சென்று அதிகாரிகள் காண்பித்து உள்ளனர் என அவர் தனது சகோதரியிடம் கூறியுள்ளார்.

1 More update

Next Story