பழிக்கு பழி... ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம்; ரஷியா அறிவிப்பு


பழிக்கு பழி... ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம்; ரஷியா அறிவிப்பு
x

ரஷியாவில் இருந்து 20 ஜெர்மனி தூதர்களை வெளியேற்றம் செய்து, அறிவித்ததுடன், நட்புறவை பெர்லின் அழித்து விட்டது என ரஷிய குற்றச்சாட்டும் தெரிவித்து உள்ளது.

மாஸ்கோ,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான நீடித்த போரால் உலக நாடுகளில் அதன் பாதிப்புகள் எதிரொலித்து வருகின்றன. இதனால், போரை முடிவுக்கு கொண்டு வர பொருளாதார தடை உள்ளிட்டவற்றை அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்டன. ஐரோப்பிய நாடுகள் தங்களது நாட்டில் இருந்து ரஷிய தூதர்களை வெளியேற்றின.

எனினும், போரானது முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து ரஷிய தூதர்களை வெளியேற்றி, ரஷியாவுக்கு அந்நாட்டு அரசு அதிர்ச்சி கொடுத்தது. ரஷியாவும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, அரசின் வெஜ்டா என்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 20-க்கும் மேற்பட்ட ஜெர்மன் நாட்டு தூதர்கள் வெளியேற உள்ளனர் என கூறியுள்ளார்.

எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்காக ரஷியாவையே ஜெர்மனி பெருமளவில் சார்ந்திருக்கிறது. இதனால், அந்நாட்டுடன் எரிசக்தி பிரிவில் ஆழ்ந்த பொருளாதார உறவுகளை பல ஆண்டுகளாக ஜெர்மனி பராமரித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் போர் சூழலில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளி அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்து கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்க கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும் கலந்து கொண்டது.

ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க கூடாது என சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இது ரஷியாவின் கவனத்திற்கும் சென்றது. இந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து ரஷிய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர்.

இதன் எதிரொலியாக, அதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், ரஷியாவும் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, கடந்த 5-ந்தேதி, ரஷியாவில் உள்ள ஜெர்மனி தூதர் கிசா ஆண்ட்ரியாஸ் வான் கெய்ரிடம், அறிவிப்பு ஒன்றை தெரிவித்தது.

இதன்படி, ரஷியாவில் உள்ள ஜெர்மன் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படி கூறியுள்ளது. ஒட்டுமொத்த ரஷிய-ஜெர்மனி உறவுகளை தொடர்ந்து, பெரிய அளவில் அழிக்கும் வகையில் பெர்லின் ஈடுபடுகிறது என மாஸ்கோ குற்றச்சாட்டு தெரிவித்தது.

ஜெர்மனியின் பகைமை நடவடிக்கைகளை தொடர்ந்து, அதற்கு அதன் முடிவையே பிரதிபலிக்க செய்யும் வகையில், ரஷியாவில் இருந்து ஜெர்மன் தூதர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்து உள்ளது.


Next Story