பாகிஸ்தானில் நாடாளுமன்றம் அருகே கார் குண்டு வெடிப்பு - 3 பேர் பலி


பாகிஸ்தானில் நாடாளுமன்றம் அருகே கார் குண்டு வெடிப்பு - 3 பேர் பலி
x

கோப்புப்படம்

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. அதன் அருகில் அரசின் பிற உயர் அலுவலகங்களும் உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் போலீஸ் தலைமையகம் இருக்கிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஒரு பெண் உள்பட 2 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் வேகமாக ஓட்டி சென்றனர். அந்த கார் போலீஸ் தலைமையகத்தை நெருங்கியபோது போலீசார் வழக்கமான சோதனைக்காக காரை தடுத்து நிறுத்தினர்.

அப்போது பயங்கரவாதிகள் காரில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கார் குண்டு வெடிப்பில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் உடல் சிதறி பலியாகினர். மேலும் 4 போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நாடாளுமன்றத்துக்கு அருகில் நடத்தப்பட்ட இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story