இஸ்ரேல் பெண் வழக்கறிஞரை கடத்தி செல்லும் ஹமாஸ் அமைப்பினர்.. பகீர் காட்சி வெளியீடு


இஸ்ரேல் பெண் வழக்கறிஞரை கடத்தி செல்லும் ஹமாஸ் அமைப்பினர்.. பகீர் காட்சி வெளியீடு
x

போர் நிறுத்தம் முடிவடைந்ததும் இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் அமைப்பும் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி காசாவில் இருந்து இஸ்ரேல் பகுதிக்குள் திடீரென நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேரை இஸ்ரேல் பகுதியில் இருந்து பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து காசா பகுதிக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் மீது போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இடையில் 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நாட்களில் இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணய கைதிகள் 105 பேரை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேலும் சுமார் 240 பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்தது. இந்த போர் நிறுத்தம் முடிவடைந்ததும் இரு தரப்பும் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் ஹமாஸ் நிலைகள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில், அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் பகுதியில் இருந்து பெண் வழக்கறிஞர் அமித் சவுசானாவை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக கடத்தி செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், 40 வயது நிரம்பிய வழக்கறிஞர் அமித் சவுசானாவை, ஆயுதமேந்திய ஹமாஸ் அமைப்பினர் 7 பேர் காசாவுக்கு இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றபோது, அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க அமித் சவுசானா கடுமையாக போராடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

போர் நிறுத்த காலத்தில் கடைசியாக விடுவிக்கப்பட்டவர்களில் சவுசானாவும் ஒருவர் என நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.


Next Story