கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து விசா கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா முடிவு


கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து விசா கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா முடிவு
x

முதற்கட்டமாக சீனாவில் விதிக்கப்பட்டிருந்த விசா கட்டுப்பாடுகளை தளர்துவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பெய்ஜிங்,

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இதனிடையே சீன அரசு 'பூஜ்ய கொரோனா கொள்கை' (Zero Covid policy) என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த திட்டங்கள் பலன் அளித்த காரணத்தால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தது.

சர்வதேச பயணத்தை தடை செய்வது, பொருளாரம் மற்றும் வணிக ரீதியிலான தொடர்புகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால், சீன அரசின் நடவடிக்கைக்கு சில கண்டனங்களும் எழுந்தன. சீன அரசு சர்வதேச பயணத்திற்கு விதித்த தடைகள் காரணமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் சீனாவில் தங்கள் கல்வியை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக இந்திய மாணவர்கள் சுமார் 23 ஆயிரம் பேர் சீனாவில் இருந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் தாயகம் திரும்பினர். சீன அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் சீனாவில் தங்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சீன அரசு ஆலோசித்து வந்தது. அதன்படி முதற்கட்டமாக சீனாவில் விதிக்கப்பட்டிருந்த விசா கட்டுப்பாடுகளை தளர்துவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வந்த வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் கல்வியை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியை தொடர சீனாவிற்கு வரும் மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழை கொண்டு வர வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.

இருப்பினும் சீனாவில் இன்னும் முழுமையாக கொரோனா தொற்று குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 1,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை, ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் ஆகிய நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story