நிலா யாருக்கு சொந்தம் மோதல் ஆரம்பமானது ...? நாசா குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு...!


நிலா யாருக்கு சொந்தம் மோதல் ஆரம்பமானது ...?   நாசா குற்றச்சாட்டுக்கு  சீனா மறுப்பு...!
x
தினத்தந்தி 5 July 2022 10:56 AM GMT (Updated: 5 July 2022 11:02 AM GMT)

நிலா யாருக்கு சொந்தம் என்பது குறித்த மோதல் ஆரம்பமானது; சந்திரனை கைப்பற்றப்போவதாக நாசாவின் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.

பெய்ஜிங்

சீனா ஒரு இராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திரனை கைபற்றக்கூடும் என நாசா குற்றமசாட்டி இருந்தது.சந்திரனை ஆராய்வதில் சீனா தனிக் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் சீனா தனது விண்வெளித் திட்டத்தின் வேகத்தை முடுக்கிவிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் சீனா முதன்முதலாக சந்திரனில் தரையிறங்கியது மற்றும் இந்த தசாப்தத்தின் இறுதியில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் அளவுக்கு சக்திவாய்ந்த ராக்கெட்டுகளை ஏவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து இருந்த நாசா நிர்வாகி பில் நெல்சன்

சீனா நிலவில் இறங்குவதைப் பற்றி நாம் மிகவும் கவலைப்பட வேண்டும்: 'இது இப்போது எங்களுடையது, நீங்கள் வெளியே இருங்கள். சீனாவின் விண்வெளித் திட்டம் இராணுவத் திட்டம் ஆகும். மற்றவர்களிடமிருந்து யோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் சீனா திருடிவிட்டது என கூறினார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-

அமெரிக்க தேசிய விண்கலம் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் தலைவர் உண்மைகளை புறக்கணித்து சீனாவைப் பற்றி பொறுப்பற்ற முறையில் பேசுவது இது முதல் முறை அல்ல.

சீனாவின் இயல்பான மற்றும் நியாயமான விண்வெளி முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பு தொடர்ந்து ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறது. மேலும் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை சீனா உறுதியாக எதிர்க்கிறது.

விண்வெளியில் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதை சீனா எப்போதும் ஊக்குவித்து வருகிறது, மேலும் விண்வெளியில் ஆயுதப் பந்தயம் மற்றும் ஆயுதப் போட்டி ஆகியவற்றை எதிர்க்கிறது என கூறினார்.

நாசா, அதன் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டில் சந்திரனைச் சுற்றிவர ஒரு குழுவை அனுப்பவும், 2025 ஆம் ஆண்டு சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு குழுவினர் தரையிறங்கவும் திட்டமிட்டுள்ளது.

சீனா இந்த தசாப்தத்தில் நிலவின் தென் துருவத்திற்கு சில நேரங்களில் திட்டமிடப்படாத பயணங்களைத் திட்டமிட்டுள்ளது.


Next Story