சீன ராணுவம் கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த நபர்களால் வழிநடத்தப்பட வேண்டும் - சீன அதிபர்


சீன ராணுவம் கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த  நபர்களால் வழிநடத்தப்பட வேண்டும் - சீன அதிபர்
x

சீன ராணுவம் கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த நபர்களால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும் என்று சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

பீஜிங்,

சீன ராணுவம் ஆளும்கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய நபர்களால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி-ஜின்பிங் தெரிவித்துள்ளார். இப்போது சீனாவின் தேசிய பாதுகாப்பில் ஒரு நிலைத்தன்மை இல்லாத உறுதியற்ற நிலை உள்ளது.

சீனாவின் பி எல் ஏ என அழைக்கப்படும் ராணுவத்தின் 95வது தினத்தில் கலந்து கொண்டு அதிபர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அரசியல் ஒற்றுமைமைக்கே முக்கியத்துவம் அளித்து ராணுவ தலைமை அதிகாரிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருமித்த தலைமையின் கீழ், ராணுவம் மீதான கட்டுப்பாடு முழுமையாக செயல்படுத்தப்படும்.

ராணுவத்தில் திறமையான வீரர்களை சேர்க்க வேண்டும், வலிமையான ராணுவம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் ஆற்றல் மிகுந்த ராணுவம் உருவாகும். உலகத்தரம் வாய்ந்த ராணுவமாக சீன ராணுவத்தை உருவாக்க முடியும் என்று கூறினார்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் பைடன் உடன் காணொலி வாயிலான ஐந்தாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சீனா அதிபர், தைவான் தொடர்பான விவகாரத்தில் சீனாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் குரலாக சீன அரசு பிரதிபலிக்கிறது. இவ்விவகாரத்தில் தலையிடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்று கடுமையாக எச்சரித்தார். சீனாவின் கருத்தை அமெரிக்க மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

சீனாவின் அண்டை நாடான தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதி நான்சி விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற செய்தி சீனாவை ஆத்திரமூட்டியுள்ளது. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. இந்த நிலையில் ராணுவம் தொடர்பான அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன ராணுவம், ராணுவ பயிற்சி தைவானுக்கு அருகாமையில் உள்ள பின்தான் தீவுகளில் ஒத்திகை நடத்தி வருகிறது.

சீன அதிபராக இருந்தவர்கள் அதிகபட்சமாக 10 வருட கால பதவிக்கு பின், பதவி விலகி விட்டனர். ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு சீன அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜின்பிங் மேலும் தொடர்ந்து அதிபராகவே பதவியில் நீடிப்பார் எனவும் வாழ்நாள் அதிபராக நீடிப்பார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் பதவியேற்றது முதல், சீன ஆளுங்கட்சியின் கீழ் ராணுவம் ஒருமித்த கருத்துடன் பணியாற்ற ஒருமித்த நம்பகமான ராணுவ தலைமை தேவை என்பதை வலியுறுத்தி வருகிறார். ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையை பெரிதளவு உயர்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Next Story