சீனாவில் வினோதம்; காதல் செய்ய மாணவ மாணவிகளுக்கு ஒரு வாரம் விடுப்பு வழங்கிய கல்லூரிகள்...?


சீனாவில் வினோதம்; காதல் செய்ய மாணவ மாணவிகளுக்கு ஒரு வாரம் விடுப்பு வழங்கிய கல்லூரிகள்...?
x
தினத்தந்தி 2 April 2023 11:26 AM IST (Updated: 2 April 2023 5:50 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்த நிலையில், காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பீஜிங்,

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் சீனாவில் பிறப்பு, இறப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. 141 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இதேபோன்று குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்து உள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்து உள்ளது.

இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதன்படி, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதித்து வந்த நிலையில் 2015-ம் ஆண்டு அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. 3 குழந்தைகள் வரை பெற்று கொள்ள அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து, திருமணம் ஆகாதவர்கள் கூட குழந்தை பெற்று கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது. இதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்வதற்கு முன் வருமாறு வேண்டுகோள் விடப்பட்டது.

இதன்படி சீன தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்பட நாடு முழுவதும் உள்ள விந்தணு தான கிளினிக்குகள் மாணவர்களை, சில விதிகளுக்கு உட்பட்டு, விந்தணு தானம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா, மற்றொரு முயற்சியில் இறங்கி உள்ளது. இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரலில் இருந்து முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிப்பது என்பதே அந்த திட்டம்.

அரசின் அனுமதியுடன் கல்வி நிலையங்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளன. இதன்படி, பேன் மெய் கல்வி குழுமத்தின் மியான்யாங் பிளையிங் கல்லூரியானது, முதன்முறையாக கடந்த மார்ச் 21-ந்தேதி இந்த விடுப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.

அந்த நாளில் காதலில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, 9 கல்லூரிகளில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது.

இதன்படி, ஏப்ரல் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மாணவ மாணவியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், வாழ்க்கையை காதலிப்பதற்கும் மற்றும் விடுமுறையை அனுபவித்து காதலை கொண்டாடவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தி உள்ளன.

இதுபற்றி மியான்யாங் பிளையிங் கல்லூரியின் துணை டீன் லியாங் குவோஹுயி கூறும்போது, மாணவர்கள் சென்று பசுமையான தண்ணீர் மற்றும் பசுமையான மலைகளை பார்ப்பார்கள் என நம்புகிறேன். அவர்கள் வசந்த காலத்தின் சுவாசம் பற்றி உணருவார்கள். அவர்களது அறிவு எல்லை விரிவடையும் மற்றும் அவர்களது காதல், வருத்தம் உள்ளிட்ட உணர்ச்சிகளும் வளர்ச்சி பெறும் என கூறுகிறார்.

அவர்களுக்கு வீட்டு பாடமும் கொடுக்கப்படுகின்றன. இதன்படி, டைரி எழுதுவது, தனிநபர் மேம்பாடு பற்றிய அளவீடுகளை பராமரித்தல், பயண வீடியோக்களை எடுத்து வருதல் ஆகியவை அவர்களுக்கான வீட்டு பாடங்களாக கொடுக்கப்பட்டு உள்ளன.

இவையெல்லாம் சரிந்து வரும் பிறப்பு விகிதம் அதிகரிக்க செய்யப்படுவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்கான முயற்சிகள். இதுபோன்று 20-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அரசு வைத்திருக்கிறது. எனினும், அதில் மக்கள் தொகை சரிவை குறைக்கும் வழியே சிறந்தது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

1 More update

Next Story