தடையை நீக்கிய எலான் மஸ்க்: டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது


தடையை நீக்கிய எலான் மஸ்க்: டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 21 Nov 2022 2:03 AM GMT (Updated: 21 Nov 2022 4:16 AM GMT)

டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

நியூயார்க்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் அவரது கணக்கை முடக்கின. இதில் டுவிட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்த தடை விதித்தது. இதனால் டிரம்ப் 'சோசியல் ட்ரூத்' என்கிற பெயரில் தனக்கென சொந்தமாக சமூகவலைத்தளத்தை உருவாக்கினார்.

இந்த நிலையில் பெரும் தொகை கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள உலகப்பணக்காரர் எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்புக்கு விதிக்கப்பட்ட நிரந்தர தடை திரும்பப்பெறுவது தொடர்பாக பரிசீலித்து வந்தார்.

அந்த வகையில் டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கலாமா? வேண்டாமா? என எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். சுமார் 1½ கோடி பேர் இதில் பங்கேற்று வாக்களித்த நிலையில் 51.8 சதவீதம் பேர் டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த ஆதரவு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எலான் மஸ்க் நேற்று நீக்கினார். இதன் மூலம் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.


Next Story