இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வி அடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை... ஏன்?


இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வி அடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை... ஏன்?
x
தினத்தந்தி 19 Oct 2023 12:10 PM GMT (Updated: 19 Oct 2023 4:22 PM GMT)

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வி அடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

தொடர்ந்து 13-வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதனால், தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த முனைந்துள்ளது.

எனினும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வி அடைய கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மக்கள் அடர்த்தி நிறைந்த அந்த பகுதியில், சுரங்கங்கள் அதிக அளவில் ஒரு நெட்வொர்க் போல் செயல்படுகின்றன. தரை பகுதி வழியேயான இஸ்ரேலின் தாக்குதல் சவாலான ஒன்றாக இருக்கும்.

ஏனெனில், ஹமாஸ் அமைப்பு தரைக்கு அடியில் விரிவான சுரங்கங்களை அமைத்து உள்ளது. இதனால், இஸ்ரேல் தோல்வியடைய கூடும் என நிபுணர்கள் பலர் எச்சரித்து உள்ளனர்.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் நேற்று கூறும்போது, சுரங்க இணைப்பு பகுதிகளை தாக்கி வருகிறோம். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என கூறினார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, 2 விமானந்தாங்கி கப்பல்கள், விமானங்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு போர் கப்பல்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்திருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிரான ஹிஜ்புல்லா அமைப்பினரின் தாக்குதல்களை தடுக்க இது பயன்படும் என தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.


Next Story