தோசை, சட்னி, சாம்பாருக்காக... பிரிட்டன் தூதர் வெளியிட்ட விருப்பம்


தோசை, சட்னி, சாம்பாருக்காக... பிரிட்டன் தூதர் வெளியிட்ட விருப்பம்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:19 PM GMT (Updated: 23 Feb 2023 1:18 PM GMT)

தோசை, சட்னி, சாம்பாருக்காக பெங்களூருவுக்கு மீண்டும் வரவேண்டும் என பிரிட்டன் தூதர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.



லண்டன்,


இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டு தூதராக இருப்பவர் அலெக்ஸ் எல்லீஸ். உணவு பிரியரான எல்லீஸ், அதிலும் இந்தியாவில் உள்ள சுவையான உணவுகள் மீது அதிக விருப்பம் கொண்டவர். இந்திய உணவின் சுவைக்கு சான்றாக அதுபற்றி எண்ணற்ற டுவிட்டர் பதிவுகளையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

அதில் வடா பாவ், தோசை மற்றும் ரசகுல்லா என பல உணவு பண்டங்களை சாப்பிடுவது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இந்திய உணவு வகைகளின் மீது கொண்டுள்ள அதிக அன்பை வெளிப்படுத்தும் வகையில், சமீபத்தில் தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

அதில், தோசை சாப்பிடுவதற்காக பெங்களூரு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார். அந்த புகைப்படத்தில், வெள்ளை நிற பீங்கான் தட்டு ஒன்றில், முக்கோண வடிவில், நன்றாக மடித்து வைக்கப்பட்ட முறுகலான தோசை ஒன்றும், கூடவே கார சட்டினியும், தேங்காய் சட்டினியும் வைக்கப்பட்டு உள்ளன.


கூடவே, அந்த பதிவில் தோசைக்கு ஆதரவான, கைவிரலை உயர்த்திய எமோஜி ஒன்றையும், நான்-வெஜ் சாப்பிடுவதற்கு உபயோகப்படும் முள் கரண்டி போன்றவை தேவையில்லை என்பதற்கான கைவிரலை கீழே காட்டும்படியான எமோஜி ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

இந்திய உணவு வகைகளின் மீது விருப்பம் தெரிவித்த அவருக்கு ஆதரவாக டுவிட்டர் பயனாளர்கள் பலர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். சிலர் மகிழ்ச்சிக்கான எமோஜிக்களையும், ஒருவர் விமான நிலைய ஓட்டலில் சுவையான தோசை கிடைக்கும் என்றும், தூதரை பெங்களூருவுக்கு வரவேற்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளனர்.






Next Story