முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்


முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்
x
தினத்தந்தி 31 Dec 2022 11:04 AM GMT (Updated: 31 Dec 2022 11:51 AM GMT)

முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் உடல்நலக்குறைவால் காலமானார்.

வாடிகன்,

முன்னாள் போப் ஆண்டவர் 16-வது பெனடிக் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்) கடந்த 2005 முதல் 2013 வரை இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தாமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார்.

அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற போப் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி வெளியிட்டுள்ள அறிக்கையில், "போப் ஆண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தது.

கடந்த 1415-ம் ஆண்டுக்கு பிறகு போப் ஆண்டவர் பதவியில் இருந்து தாமாக பதவி விலகியவர் 16-வது பெனடிக் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story