ஜெர்மனி: விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது; 4 வயது சிறுமி மீட்பு


ஜெர்மனி:  விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது; 4 வயது சிறுமி மீட்பு
x
தினத்தந்தி 6 Nov 2023 6:19 AM GMT (Updated: 6 Nov 2023 7:22 AM GMT)

காரில் வந்த சந்தேகத்திற்குரிய 35 வயது நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருடைய காரில் இருந்த 4 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

பெர்லின்,

ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்திற்குள் கடந்த 4-ந்தேதி மர்ம நபர் ஒருவர் காரில் வந்துள்ளார். அவர் திடீரென கையில் இருந்த துப்பாக்கியை தூக்கி, வானை நோக்கி 2 முறை சுட்டார். காரில் இருந்து, எரிந்து கொண்டிருந்த 2 பாட்டில்களையும் எடுத்து, தூக்கி வீசியுள்ளார்.

இதனால், பயணிகள், அவர்களின் உறவினர்கள் என அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதுபற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். இதில், பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு அந்த வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படி, விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

எனினும், இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவரும் காயம் அடையவில்லை. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் அவருடைய மனைவி போலீசை தொடர்பு கொண்டு, அந்த நபர் என்னுடைய மகளை கடத்தி கொண்டு செல்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், ஹேம்பர்க் போலீசார் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காரில் வந்த சந்தேகத்திற்குரிய 35 வயது நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருடைய காரில் இருந்த 4 வயது சிறுமி மீட்கப்பட்டார். சிறுமிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கைது செய்யும்போது, அந்த நபர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என தெரிவித்து உள்ளனர்.


Next Story