கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழைய எதிர்ப்பு


கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழைய எதிர்ப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Sep 2022 3:47 AM GMT (Updated: 2022-09-07T10:10:56+05:30)

கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழையக்கூடாது என்று புதிய லங்கா விடுதலை கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு,

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் பதவி விலகினர்.

கடந்த ஜூலை 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். ஜூலை 13-ந் தேதி அவர் மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார். மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

அங்கு 4 வாரங்கள் தங்கிய பிறகு தாய்லாந்து சென்றார். தனது குடும்பத்தினர் தங்கி இருக்கும் அமெரிக்காவுக்கு செல்ல அவர் விரும்பினார். ஆனால் விசா கிடைக்கவில்லை. இதனால் கடந்த 3-ந் தேதி இலங்கை திரும்பினார்.

இந்தநிலையில், புதிய லங்கா விடுதலை கட்சி என்ற அரசியல் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா பட்டரமுல்லாவில் நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் குமார வெல்காமா பேசியதாவது:- கோத்தபய ராஜபக்சேவுக்கு அரசியல் அறிவு கிடையாது. அரசியலை அரசியல்வாதிகளிடமே விட்டுவிட வேண்டும்.

அவர் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அவர் அரசியலில் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நாம் கணித்தது சரியானதுதான் என்பதை கடந்த 2 ஆண்டுகால நிகழ்வுகள் நிரூபித்து விட்டன. அவர் அரசியலில் மீண்டும் நுழைய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவது பற்றி அவர் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று நான் சொல்லிக்கொள்கிறேன் என்று அவர் பேசினார்.


Next Story