ரசாயன வெடிகுண்டுகளை வீச திட்டமிட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள்; இஸ்ரேல் திடுக் தகவல்


ரசாயன வெடிகுண்டுகளை வீச திட்டமிட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள்; இஸ்ரேல் திடுக் தகவல்
x

சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்ட திடுக் தகவலை இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி திடீரென தரை, கடல் மற்றும் வான்வழியே தாக்குதலை தொடுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து இரு வாரங்களுக்கும் கூடுதலாக நடந்து வரும் மோதலால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளின் உடல்களில் யு.எஸ்.பி.க்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அவற்றில் சயனைடு பரப்ப கூடிய உபகரணங்கள் பற்றிய விரிவான வரைபடங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன என இஸ்ரேல் அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளனர்.

இதுபற்றி தூதரகங்களுக்கு இஸ்ரேல் அனுப்பிய செய்தியில், இந்த கண்டுபிடிக்கப்பட்ட தகவலால், ஹமாஸ் அமைப்பு, குடிமக்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலின் ஒரு பகுதியாக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முன்பு மேற்கொண்ட முயற்சியை போன்று, அதேவித தாக்குதலை தொடுக்க ஹமாஸ் அமைப்புக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜோக் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் ஸ்கை நியூசுக்கு அளித்த பேட்டியில், இது அல்-கொய்தாவை அடிப்படையாக கொண்டது.

2003-ம் ஆண்டு அந்த பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட திட்டத்துடன் தொடர்புடையது. நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

சயனைடுடன் ரசாயன ஆயுதங்களை கொண்டு, அவற்றை எப்படி இயக்குவது உள்ளிட்ட உத்தரவுகள் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சிக்குரிய விசயம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story