ரஷியாவில் நடைபெறும் கூட்டு போர் பயிற்சியில் இந்திய, சீன ராணுவம் பங்கேற்கும் - சீனா தகவல்

இந்த மாத இறுதியில் ரஷியாவில் நடைபெறும் கூட்டு போர் பயிற்சியில் இந்திய, சீன ராணுவம் பங்கேற்கும் என சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்,
ரஷியாவில் வருகிற 30-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி வரை 'வோஸ்டாக்-2022' என்கிற பெயரில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவம் பங்கேற்கும் கூட்டு போர் பயிற்சி நடக்கவுள்ளது. இந்த கூட்டு போர் பயிற்சியில் இந்தியா மற்றும் சீன ராணுவம் பங்கேற்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சீன மற்றும் ரஷிய ராணுவத்துக்கு இடையிலான வருடாந்திர ஒத்துழைப்புத் திட்டம் மற்றும் இருதரப்பு ஒருமித்த கருத்துப்படி, சீன ராணுவம் தனது சில துருப்புகளை போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக ரஷியாவுக்கு அனுப்பவுள்ளது. இந்தியா, பெலாரஸ், தஜிகிஸ்தான், மங்கோலியா மற்றும் பிற நாடுகளும் இந்த பயிற்சியில் பங்கேற்கும்" என கூறப்பட்டுள்ளது. எனினும் ரஷியாவில் நடைபெறும் கூட்டு போர்ப்பயிற்சியில் இந்திய ராணுவம் பங்கேற்பது குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது






