இலங்கையில் அதிகரிக்கும் போதை பொருள் பயன்பாடு...? 5 லட்சம் இளைஞர்கள் அடிமை; மந்திரி அதிர்ச்சி தகவல்


இலங்கையில் அதிகரிக்கும் போதை பொருள் பயன்பாடு...? 5 லட்சம் இளைஞர்கள் அடிமை; மந்திரி அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2022 2:22 AM GMT (Updated: 24 Nov 2022 2:36 AM GMT)

இலங்கையில் பள்ளி மாணவர்கள் உள்பட 5 லட்சம் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என அந்நாட்டு மந்திரி அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.


கொழும்பு,


இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால், அதிபர் மாளிகைக்குள் மக்கள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை மக்கள் எதிர்கொண்டனர். இதன்பின்னர், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு பொருளாதாரம் சார்ந்த உதவிகளை வழங்கியது. நிலைமை ஓரளவு சீரடைந்தபோதும், முழுமையாக அதில் இருந்து அந்நாடு விடுபடவில்லை.

இந்த நிலையில், இலங்கையில் போதை பொருள் கலாசாரம் அந்நாட்டு இளைஞர்கள் இடையே அதிகரித்து உள்ளது என அந்நாட்டு மந்திரி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

இலங்கையின் நீதி, சிறை விவகாரம் மற்றும் அரசியல்சாசன சீர்திருத்த மந்திரியாக இருப்பவர் டாக்டர் விஜயதாசா ராஜபக்சே. இவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இலங்கையானது, ஆபத்து விளைவிக்கும் மற்றும் தீங்கு தரும் போதை பொருட்களின் மையம் ஆக உருமாறி வருகிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

அதனாலேயே இலங்கை கடற்படை ஆபத்து ஏற்படுத்த கூடிய, நஞ்சான போதை பொருட்களை அதிரடி சோதனை நடத்தி, அதிக எண்ணிக்கையில் பறிமுதல் செய்ய முடிகின்றது என்று கூறியுள்ளார்.

இதற்காக பெரிய அளவிலான போதை பொருள் கடத்தல்காரர்களின் வழக்குகளை விரைந்து முடிக்க தனியாக ஐகோர்ட்டு ஒன்றை அமைக்கவும் தலைமை நீதிபதியை அரசு கேட்டு கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

பொருளாதார சிக்கல்களை விட பெரிய பிரச்சனையாக இந்த விவகாரம் உள்ளது. பொருளாதாரம் சார்ந்த விவகாரங்கள் அதிகரித்து, பின்னர் அடங்கி விடும். ஆனால், இந்த போதை பொருள் விவகாரம் நாட்டின் ஒட்டுமொத்த தலைமுறையையும் அழித்து விடும் என தெரிவித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, தற்போதுள்ள தரவுகள், அறிக்கைகள் நிறைவாக இல்லை என்றபோதும், கிடைத்துள்ள அறிக்கைகளின்படி, ஏறக்குறைய 5 லட்சம் இலங்கை இளைஞர்கள் இந்த போதை பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களும், இதற்கு அடிமையாகி உள்ளனர்.

இதனால், தொடர்ந்து பெரிய அளவில் சோதனைகள் நடத்தி, அதிக எண்ணிக்கையிலான கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். ஒரு சில ஊழல் அதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளன என கூறிய மந்திரி, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களில் சிறிய அளவில், அவற்றின் மாதிரிகள் பாதுகாக்கப்பட்டு பின்னர் அவற்றை விரைவில் அழிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிபர் மட்டத்திலான அதிரடி படையை அமைக்க வேண்டும் என்று அவர் மத்திய அமைச்சரவைக்கு முன்மொழிவு ஒன்றை வழங்கியுள்ளார். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, 9 மாகாணங்களில் போதை பொருள் ஒழிப்பு முகமைகள் செயல்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையில், இவற்றுக்கு அடிமையாவதற்கு ஒரு நாள் போதும். ஆனால், ஒருவர் அதற்கு அடிமையான பின்னர், அவரது வாழ்நாள் 2 ஆண்டுகளாக குறைந்து விடும் என்று கடுமையாக எச்சரித்து உள்ளனர்.


Next Story