100 குழந்தைகள் பலி எதிரொலி: இந்தோனேசியாவில் திரவ மருந்துகளுக்கு தடை


100 குழந்தைகள் பலி எதிரொலி: இந்தோனேசியாவில் திரவ மருந்துகளுக்கு தடை
x

கோப்புப்படம்

இந்தோனேசியாவில் திரவ மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜகார்த்தா,

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தின. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக அந்த நாட்டில் அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி இந்தோனேசியா கூறுகையில், "திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்துகிற (நச்சு) பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் இறந்துள்ளன" என தெரிவித்தது. இந்தோனேசிய சுகாதார அதிகாரிகள் நேற்று கூறுகையில், "200 குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இந்த குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்" என தெரிவித்தனர்.

இந்தோனேசிய சுகாதார மந்திரி புதி குணாதி சாதிகின் கூறுகையில், " 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில (நச்சுத்தன்மை கொண்ட) டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது" என தெரிவித்தார்.

இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை. அதேநேரத்தில் காம்பியாவில் பயன்படுத்தப்பட்ட இருமல் மருந்துகள், இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை என இந்தோனேசிய அதிகாரிகள் கூறினர். இங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மருந்துகளின் பெயர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அவற்றின் விற்பனைக்கும், அவற்றை பரிந்துரை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story