அரசை எதிர்ப்பவர்களை தீர்க்கமாக எதிர்கொள்ள வேண்டும்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி!

நாட்டின் அமைதிக்கு எதிரானவர்கள் மீது "தீர்க்கமான நடவடிக்கை" எடுக்கப்படும் என்று ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
அரசை எதிர்ப்பவர்களை தீர்க்கமாக எதிர்கொள்ள வேண்டும்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி!
Published on

தெஹ்ரான்,

ஈரானில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி போலீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது.

ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேவேளை, போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் ஒரு போலீஸ் பாதுகாப்பு பணியாளர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்துடன் போனில் பேசிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி,

போராட்டக்காரர்களுக்கு எதிராக "தீர்மானமான நடவடிக்கை" எடுக்கப்படும் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு எதிரானவர்கள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

போராட்டத்தில் குறைந்தது 41 பேர் இறந்துள்ளனர், அதில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், சீர்திருத்த ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.700-க்கும் மேற்பட்டுள்ளோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இதில் 60 பேர் பெண்கள் என்றும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

போராட்டம் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப், பேஸ்புக், டுவிட்டர், டிக்-டாக் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com