ஈரான் அதிபர் மரணத்துக்கு சதி காரணமா? - புதிய தகவல்கள்


ஈரான் அதிபர் மரணத்துக்கு சதி காரணமா? - புதிய தகவல்கள்
x
தினத்தந்தி 20 May 2024 7:14 AM GMT (Updated: 20 May 2024 9:10 AM GMT)

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டருடன் மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன.

தெஹ்ரான்,

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (வயது 63). இவர் நேற்று அண்டை நாடான அசர்பைஜான் சென்றார். ஈரான் - அசர்பைஜான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள அணையின் திறப்பு விழாவில் அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் இப்ராகிம் ரைசி பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குபின் அதிபர் ரைசி உள்பட அனைவரும் நேற்று மாலை ஈரான் புறப்பட்டனர். அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர் உள்பட முக்கிய தலைவர்கள் ஒரு ஹெலிகாப்டரிலும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் மேலும் 2 ஹெலிகாப்டரிலும் ஈரான் புறப்பட்டனர்.

ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்துகொண்டிருந்த அதிபர் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி அமீர் உள்ளிட்டோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மட்டும் திடீரென மாயமானது. இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் ஈரான் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மலைப்பகுதி என்பதாலும் அதிக பனிமூட்டமாக இருந்ததாலும் தேடுதல் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. 15 மணி நேரத்திற்கு மேல் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்ற நிலையில் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

மலை உச்சியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி அமீர் உள்பட 9 பேரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்து முழுவதும் கருகிய நிலையில் அதில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டு அதில் இருந்த அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்தாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அவற்றில் குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியுள்ளன. ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியுள்ளது. இதனால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என கேள்வி எழுந்துள்ளது.

காசாமுனையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 1ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானிய புரட்சிப்படை தளபதிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மாதம் 13ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது அதுவே முதல்முறையாகும். இந்த தாக்குதலை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தின. அதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் தேவை ஏற்பட்டால் இதைவிட பலமடங்கு பலம் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை, ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் சொந்தமாக முடிவெடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் 17ம் தேதி தெரிவித்திருந்தார். அவர் கூறிய 2 நாட்களில் (கடந்த மாதம் 19ம் தேதி) ஈரானின் இஷ்பஹான் நகரில் உள்ள விமானப்படைத்தளத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதேபோல், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் விமானப்படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அசர்பைஜான் சென்றுவிட்டு ஈரான் திரும்பியபோது அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கும் இப்ராகிம் ரைசி மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஈரான் அதிபரின் மரணத்தில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதித்திட்டங்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், 3 ஹெலிகாப்டர்கள் பயணித்த நிலையில் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீரும் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய ஒருமாதத்தில் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இது மொசாட்டின் சதித்திட்டமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடைபெற்றால் மட்டுமே வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததா? அல்லது விபத்தில் மொசாட்டிற்கு பங்கு உள்ளதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story