இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் - விமான நிலையம் மூடல்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது.
Image Courtesy; AFP
Image Courtesy; AFP
Published on

ஜெருசலேம்,

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு செயல்பட்டு வருகிறார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நெதன்யாகு தலைமையில் நாடாளுமன்றத்தில் புதிதாக சட்டம் கொண்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சட்டம் அமலாகும்பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரம் குறையும். மேலும், கோர்ட்டின் உத்தரவுகளை மீறவும் இஸ்ரேல் அரசுக்கு அதிகாரம் வழங்கும். அதேபோல், நீதிபதிகள் நியமிப்பதிலும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். இது நீதித்துறையை முடக்கும் செயல் என கூறி இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதேவேளை, நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவரும் அரசின் முடிவை பாதுகாப்புத்துறை மந்திரி யொவ் ஹலெண்ட் விமர்சித்தார். இதனால், பாதுகாப்புத்துறை மந்திரி ஹலெண்டை பிரதமர் நெதன்யாகு பதவில் இருந்து நீக்கினார்.

இதனை தொடர்ந்து, நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவரும் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் போராட்டத்திற்கு டெல் அவிவ் விமான நிலைய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வேலையை புறக்கணித்தனர். இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டு டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும், நீதித்துறை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com