இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: சிரியாவில் விமான நிலைய சேவை பாதிப்பு; 2 வீரர்கள் பலி


இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: சிரியாவில் விமான நிலைய சேவை பாதிப்பு; 2 வீரர்கள் பலி
x

இஸ்ரேல் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் சிரியாவில் விமான நிலைய சேவை பாதித்ததுடன், 2 வீரர்கள் பலியானார்கள்.



டமாஸ்கஸ்,


சிரியா நாட்டில் நீண்ட கால உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் இருந்து முழுமையாக அவர்கள் இன்னும் மீளவில்லை. இந்த சூழலில், சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதனை சிரியாவில் இருந்து வெளிவரும் சனா என்ற அரசு ஊடகம் உறுதிப்படுத்தி உள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த இந்த தாக்குதலில் விமான சேவை பாதிப்படைந்தது. சிரியாவின் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

ஈரான், லெபனான் போன்ற வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுத சப்ளை நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்த ஆயுதங்களை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் மீது கடந்த ஜூன் 10-ந்தேதி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அதன் உள்கட்டமைப்பு மற்றும் ஓடுபாதை சேதமடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

2 வார பராமரிப்பு பணிகளுக்கு பின் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்பின் மற்றொரு நகரான அலெப்போவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பல நாட்களுக்கு விமான சேவை பாதிப்படைந்தது.

சமீபத்திய ஆண்டுகளாக சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.


Next Story