காபூல் தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தகவல்


காபூல் தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தகவல்
x

இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கல்வி மையத்தில் நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிப் பணி அமைப்பு(யு என் ஏ எம் ஏ), காபூலில் உள்ள அதன் மனித உரிமைக் குழுக்கள் மூலம் உதவுவதாக தெரிவித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலோர் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள். சரியான பலி எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளது.

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்கானிஸ்தான் சிறுபான்மையினரான ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் காபூலில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், தலிபான் தலைமையிலான வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், இது மசூதிகள், கல்வி நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களின் மீது தீய வட்டங்களால் நடத்தப்பட்ட ஒரு செயல். இது ஆப்கானிஸ்தான் மக்களின் எதிரிகளின் சதியால் மேற்கொள்ளப்பட்ட செயலாகும் என்று தெரிவித்துள்ளது.

கல்வி நிலையங்களில் அப்பாவி மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என்று இந்தியா உட்பட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆப்கான் நிலவரம் குறித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில், ஆப்கானில் ஷியா முஸ்லிம் இன குழுவினரான "ஹசாரா பெரும்பான்மையினர்" தொடர்ந்து பாகுபாடு மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை ஆப்கான் அரசாங்கங்களால் எதிர்கொண்டனர். 1990களில், தலிபான் படைகள் ஷியா பிரிவினரை குறிவைத்து கொலைகள் மற்றும் பிற கடுமையான துஷ்பிரயோகங்களை அரங்கேற்றின.

'ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பிரிவான (கொராசன் மாகாணத்தின் இஸ்லாமிய அரசு)' ஆப்கானில் ஹசாரா பிரிவு மக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் மீது மசூதிகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் வைத்து பலமுறை தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனால் இந்த சிறுபான்மை சமூகங்கள் மீதான தற்கொலைப்படை குண்டுவெடிப்புகள் மற்றும் பிற சட்டவிரோத தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க தலிபான்கள் அரசு எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளது.


Next Story