லண்டனில் காலிஸ்தானியர்கள் போராட்டம்: இந்திய தூதரகத்தில் தேசிய கொடி அவமதிப்பு; வழக்கை கையிலெடுத்தது என்.ஐ.ஏ.


லண்டனில் காலிஸ்தானியர்கள் போராட்டம்:  இந்திய தூதரகத்தில் தேசிய கொடி அவமதிப்பு; வழக்கை கையிலெடுத்தது என்.ஐ.ஏ.
x

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இந்திய தூதரகத்தில் காலிஸ்தானியர்கள் போராட்டத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையிலெடுத்து உள்ளது.

லண்டன்,

நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்து கோவில்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தினர் என விசாரணைக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோவில்களில் எழுதி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்தனர். சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன் கடந்த மார்ச் 22-ந்தேதி காலிஸ்தானியர்கள் ஒன்று திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இதனால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பான்களை அமைத்தனர். ஆனால், அவற்றை நீக்கி விட்டு, தொடர்ந்து கோஷம் எழுப்பினர். ஒரு சிலர் தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை கீழே இறக்கினர். இதுபற்றிய புகைப்படங்கள் வைரலாகின.

இதனால், அந்த பகுதியில், பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே லண்டன் பெருநகர போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இங்கிலாந்தின் லண்டன் மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடந்தது போன்று வாஷிங்டன் நகரையும் கடந்த மார்ச் இறுதியில் அவர்கள் முற்றுகையிட முயன்றனர். எனினும், அமெரிக்க போலீசார் மற்றும் உளவு அமைப்பு அதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தடுத்தது.

லண்டன் தூதரகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான பயங்கரவாத மற்றும் தீவிரவாத ஒழிப்புக்கான சி.டி.சி.ஆர். என்ற அமைப்பு விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்தது.

இதனை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தூதரகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) கையிலெடுத்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.


Next Story