குவைத்தில் 77 சதவீதம் பேருக்கு உடல் பருமன்.. அரபு நாடுகளில் முதலிடம்


குவைத்தில் 77 சதவீதம் பேருக்கு உடல் பருமன்.. அரபு நாடுகளில் முதலிடம்
x

மரணத்திற்கு வழிவகுக்கும் காரணிகளில் ஐந்தாவது முக்கிய ஆபத்து காரணியாக உடல் பருமன் நோய் மாறியுள்ளதாக டாக்டர் வஃபா அல்-ஹஷாஷ் கூறினார்.

உடலில் ஆரோக்கியமற்ற எடையை கொண்ட ஒரு சிக்கலான நோய் உடல் பருமன். உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. கட்டுப்பாடற்ற உணவு பழக்கங்கள் மற்றும் உடலியக்கம் குறைவது, உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாதது, தைராய்டு பிரச்சினை போன்றவை உடல் பருமனை விரைவில் அதிகரித்துவிடும்.

உலகம் முழுவதும் உடல் பருமன் நோய் பெரும் சுகாதார பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. உலகளாவிய உடல் பருமன் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு குவைத்தும் விதிவிலக்கல்ல.

வளைகுடா மக்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் தொடர்பாக தனியார் அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை உள் மருத்துவம் மற்றும் இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் வஃபா அல்-ஹஷாஷ் வெளியிட்டார்.

அதில், வளைகுடா நாடுகளில் குவைத் நாட்டில்தான் அதிக அளவிலான உடல் பருமன் நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குவைத் நாட்டின் மக்கள்தொகையில் 77 சதவீதம் பேருக்கு உடல் பருமன் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நாட்டில் மரணத்திற்கு வழிவகுக்கும் காரணிகளில் ஐந்தாவது முக்கிய ஆபத்து காரணியாக உடல் பருமன் நோய் மாறியுள்ளதாக டாக்டர் வஃபா அல்-ஹஷாஷ் கூறினார்.

"குவைத்தில் 18 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களுக்கு அதிக அளவில் உடல் பருமன் பாதிப்பு இருப்பது கவலை அளிக்கும் விஷயம் ஆகும். உடல் பருமன் காரணமாக சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை, குறட்டை, மூட்டு வலி, தண்டுவடப் பிரச்சினைகள் உள்ளிட்டவை வர வாய்ப்புகள் இருக்கின்றன. உடல் பருமனால் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சுரப்பு பாதிப்பால் விரைவாக பூப்படைந்து விடுகின்றனர்' என்றும் டாக்டர் வஃபா அல்-ஹஷாஷ் குறிப்பிட்டார்.


Next Story