உக்ரைன் சுதந்திர தினம்: மாபெரும் தாக்குதலுக்கு ரஷியா திட்டம் - பொதுமக்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!


உக்ரைன் சுதந்திர தினம்: மாபெரும் தாக்குதலுக்கு ரஷியா திட்டம் - பொதுமக்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!
x
தினத்தந்தி 21 Aug 2022 3:00 AM GMT (Updated: 21 Aug 2022 3:28 AM GMT)

உக்ரைன் மக்கள் வரும் வாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கீவ்,

உக்ரைன் மக்கள் அனைவரும் வரும் வாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருக்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கிரிமியா பகுதிகளில் நடத்தப்பட்ட புதிய குண்டுவெடிப்புகள் மற்றும் அங்குள்ள அணுமின் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஒரு ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர்.

பிவ்டெனுக்ரைன்ஸ்க் அணுமின் நிலையத்தில் நேற்று நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதல் மற்றும் உக்ரைனின் மிகப்பெரிய ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகே புதிய குண்டுவெடிப்பு தாக்குதல் ஆகியவற்றால் போரின் போது அணு விபத்து ஏற்படலாம் என்பது பற்றிய புதிய அச்சத்தை தூண்டியுள்ளது.

இந்நிலையில், வரும் 24ம் தேதியன்று உக்ரைன் சுதந்திர தினம் வருவதையொட்டி அங்கு தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உக்ரைன் சோவியத் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற 31வது ஆண்டு முடிவடைவதை குறிக்கும் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி பதற்றம் அதிகரித்துள்ளதால், கார்கிவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உக்ரைன் சுதந்திர தினத்திற்கு முன்னதாக ரஷியாவின் கொடூர தாக்குதல் நடக்கலாம் என நாட்டு மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, "இந்த வாரம் ரஷியா குறிப்பாக அசிங்கமான, குறிப்பாக தீய செயலைச் செய்ய முயற்சி செய்யலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்"என்று அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.

சுதந்திர தின தாக்குதல் குறித்து உக்ரைனின் ஆயுதப் படைகளின் ரிசர்வ் கர்னல் மற்றும் ராணுவ நிபுணர் ஒருவர் கூறுகையில், "சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரும் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் ஏற்கனவே தயாராகி வருகிறது. பெலாரஸிலிருந்து மட்டுமல்ல, கருங்கடல் மற்றும் ரஷியாவிலிருந்தும் எதிரி ஒரே நேரத்தில் மூன்று பக்கங்களிலிருந்தும் தாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மறுமுனையில், ரஷிய படைகளும் உக்ரைன் சுதந்திர தினத்தன்று உக்ரைனின் ஆயுதப்படைகளிடமிருந்து ஒரு பெரிய தாக்குதலை எதிர்பார்க்கிறார்கள். ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய புலனாய்வு இயக்குநரகம் படி, "ஆகஸ்ட் 24 அன்று, அவர்கள்(ரஷிய படைகள்) பெரும் படைகளுடன் எங்களைத் தாக்குவார்கள். அவர்கள் ஒரு பெரும் மரணதண்டனையை ஏற்பாடு செய்ய விரும்புகிறார்கள்"என்று ரஷிய ராணுவ வீரர் ஒருவர் கூறினார்.

சமீபத்தில், உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story