பயங்கரவாதிகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இஸ்ரேல்


பயங்கரவாதிகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இஸ்ரேல்
x

காசாமுனையில் பயங்கரவாதிகளை கண்டறிய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 360 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியது முதல் காசா முனையில் தற்போது நடந்துவரும் போரில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் 604 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இஸ்ரேல் பயன்படுத்தும் 'லேவண்டர்' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காசாவில் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கும் நபர்களை அடையாளம் கண்டு இஸ்ரேல் ராணுவத்திற்கு தெரிவிக்கிறது. பின்னர், அந்த இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்துகிறது.

போரில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்துவது தொடர்பாக வெளியான தகவல் உலக நாடுகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story