இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கின் வாழ்க்கை குறிப்பு...!


இங்கிலாந்து பிரதமரான  ரிஷி சுனக்கின் வாழ்க்கை குறிப்பு...!
x
தினத்தந்தி 24 Oct 2022 8:35 PM GMT (Updated: 2022-10-25T17:12:40+05:30)

இங்கிலாந்து பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமராக தேர்வாகி உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அவரது வாழ்க்கை குறிப்பு பற்றிய விவரம் வருமாறு:-

ரிஷி சுனக்கின் (வயது 42) . அவரது தாத்தா இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் ராம்தாஸ் சுனக். பஞ்சாப்புக்கு உட்பட்ட குஜ்ரன்வாலா பகுதிதான் அவரது பூர்வீகம் ஆகும். நாடுகள் பிரிக்கப்பட்டபோது அந்த பகுதி பாகிஸ்தானுக்குசென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த ராம்தாஸ் சுனக், கிளர்க்காக தனது பணியை தொடங்கினார்.

பின்னர் அவர் இந்தியாவில் இருந்து 1935-ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு உட்பட்ட நைரோபிக்கு சென்றார். 1937-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த சுஹாக் ராணி சுனக் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் ரிஷி சுனக்கின் தந்தை யஷ்வீர் சுனக். அவர் கென்யாவில் பிறந்தார். அவரது தாய் உஷா, டான்சானியாவில் பிறந்தவர் ஆவார். இவர்கள் அனைவரும் 1960-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்தனர்.

டாக்டரான யஷ்வீரும், மருந்தளுனரான உஷாவும் இங்கிலாந்தின் ஹாம்பிசைர் மாகாணம் சவுத்தாம்ப்டன் நகரில் மருந்தகம் ஒன்றை அமைத்து தொழில் செய்து வந்தனர். ஹாம்ப்சைரில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், பின்னர் வின்செஸ்டரில் உள்ள ஆண்கள் பள்ளியில் அங்கேயே தங்கி படித்தார். அவர் அங்கு மாணவர் தலைவராக விளங்கினார். பின்னர் அவர் 2001-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லிங்கோல்ன் கல்லூரியில் சேர்ந்து தத்துவம், அரசியல், பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார்.

இந்த நேரத்தில் அவர் கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 2006-ம் ஆண்டு அவர் ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். பின்னர் ஒரு வங்கியில் ஆலோசகராக பணியில் சேர்ந்த ரிஷி சுனக், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி தனது திறமையை நிரூபித்தார். மேலும் அவர் இங்கிலாந்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நாராயணமூர்த்திக்கு சொந்தமான கேட்டர்மாரன் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக பணியில் சேர்ந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு முழுமையாக அரசியல் பிரவேசம் மேற்கொண்ட ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் யார்க்சைர் மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு கருப்பு மற்றும் சிறுபான்மையின மக்களின் தலைவராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார். அதையடுத்து 2015-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலிலும் ரிஷி சுனக் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

2017-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்ற ரிஷி சுனக், தனது ஆதரவு பலத்தை நிரூபித்தார். இதையடுத்து அவரை அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டின் பொருளாதார தலைமை செயலாளராக நியமித்தார். 2019-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற ரிஷி சுனக், இங்கிலாந்து நாட்டின் உயரிய பதவியான கருவூல தலைவரான நியமிக்கப்பட்டார்.

அப்போது இங்கிலாந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியது. அந்த சமயத்திலும் ரிஷி சுனக் திறம்பட பட்ஜெட் தாக்கல் செய்தார். வரி விலக்குகளை அறிவித்தார். மேலும் கேபினட் மந்திரியாக பதவி வகித்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், மேட் ஹான்காக், மைக்கேல் கோவ் உள்ளிட்ட தலைவர்களுடன் சேர்ந்து கொரோனா காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க காரணமாக இருந்தார்.

குறிப்பாக இவர் கொரோனா காலத்தில் பணியாளர் தக்கவைப்பு திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க தயங்கியபோதும், ரிஷி சுனக் தனது பொருளாதார யுக்தியால் திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டம் மூலம் கொரோனா காலத்தில் பணிகள் நடைபெறாதபோது அரசும், தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு 80 சதவீத ஊதியத்தை வழங்கின.

இதன்மூலம் ரிஷி சுனக் இங்கிலாந்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படி பல்வேறு வரலாறுகளை படைத்த ரிஷி சுனக் கடைசியாக இங்கிலாந்து பெண் பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரிசபையில் நிதி மந்திரியாக இருந்தார். தற்போது லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு அந்நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷி சுனக்கிற்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவிற்கும் (42) கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனுஷ்கா, கிருஷ்ணா என 2 மகள்கள் உள்ளனர். தற்போது அவர்கள் இங்கிலாந்தின் யார்க்சைர் நகரில் வசித்து வருகிறார்கள். மேலும் இந்துவான ரிஷி சுனக் அங்குள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story