கென்ய பள்ளிகளில் மதிய உணவு திட்டம்; இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு குழு


கென்ய பள்ளிகளில் மதிய உணவு திட்டம்; இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு குழு
x

கென்யாவில் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அமல்படுத்தும் நோக்கில் அந்நாட்டை சேர்ந்த குழு ஒன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.



நைரோபி,


இந்தியாவில் செயல்படும் மதிய உணவு திட்டம் பற்றி அறிந்து கொண்டு அவற்றை தங்களது நாட்டில் அமல்படுத்தும் நோக்கில் கென்யா நாட்டில் இருந்து குழு ஒன்று வருகை தந்துள்ளது.

இந்த குழுவில் அந்நாட்டின் நைரோபி நகர துணை கவர்னர் ஜேம்ஸ் ஜோரோஜ் முசிரி, தலைமை கல்வி அதிகாரி ரூத் ஆவுவர் மற்றும் நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் துறை இயக்குனர் ஜாய்ஸ் கின்யான்ஜூய் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்கள் வருகை தந்தனர்.

இதுபற்றி துணை கவர்னர் ஜேம்ஸ் கூறும்போது, நைரோபி கவுன்டி பகுதியில் 60% குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்காத சூழல் உள்ளது. அவர்களின் பெற்றோரால் ஒரு நாளைக்கு சத்துள்ள உணவை ஒரு முறை மட்டுமே கொடுப்பதும் மிக அரிது.

இதனால், அவர்களுக்கு இடையே மோதல், உணவு வீணாதல் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்றவை அதிகரித்து உள்ளது.

இந்த சூழலில் தேசிய அரசும், எங்களது நகர அரசும் இணைந்து, பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் ஆனது, ஊட்டச்சத்து சரிவர கிடைக்காத குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் சேர்த்து பலனளிக்கும் என்ற உண்மையை அறிந்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.

இந்த திட்டம் எங்களது கவுன்டி பகுதியில் அமல்படுத்தினால், பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதுடன், அடிப்படை கல்வியில் சிறப்புடன் மாணவர்கள் செயல்படுவார்கள் என்பதுடன் மேற்கூறிய விவகாரங்களுக்கும் தீர்வு காணப்படும் என கூறியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, கென்யாவை சேர்ந்த உயர்மட்ட குழுவானது இந்தியாவின் ஆமதாபாத்தில் உள்ள பெரிய சமையலறையில் தினசரி 1 லட்சம் மதிய உணவை உற்பத்தி செய்வதில் உள்ள நடைமுறைகள், தர பராமரிப்பு உள்ளிட்ட விசயங்களை பார்வையிட வந்துள்ளது.

இந்திய அரசின் பிரதம மந்திரி போஷான் திட்டத்துடன் இணைந்து செயல்படும் அக்சய பத்ரா என்ற பலன் சாரா இந்திய அமைப்பின் நடவடிக்கைகளை கற்று கொண்டு, அவற்றை ஆப்பிரிக்க நாட்டின் பள்ளி கூடங்களில் அமல்படுத்த முடிவாகி உள்ளது என்பது நாட்டுக்கு பெருமை அளிக்க கூடிய விசயம் ஆகும்.


Next Story