18 பேரை சுட்டுக்கொன்று தப்பியோடிய நபர் பிணமாக மீட்பு


18 பேரை சுட்டுக்கொன்று தப்பியோடிய நபர் பிணமாக மீட்பு
x

கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் விளையாட்டு அரங்கம் மற்றும் கேளிக்கை விடுதி அருகருகே உள்ளது.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை அதிகாலை விளையாட்டு கூடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலும், கேளிக்கை விடுதிக்குள்ளும் நுழைந்த அந்த நபர் அங்கிருந்தவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றார்.

இந்த கொடூர தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தலைமறைவான குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது 40 வயதான ராபர்ட் கார்ட் என்பது தெரியவந்தது. ராணுவத்தில் ரிசர்வ் பிரிவில் இருந்த ராபர்ட் தலைமறைவான நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், 18 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த குற்றஞ்சாட்டப்பட்ட ராபர்ட் கார்ட் 48 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். லிஸ்பன் பகுதியில் உள்ள காட்டுக்குள் ராபர்ட் கார்ட் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ராபர்ட் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story