இந்திய பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதா? ஆளும் கட்சி மந்திரிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் கண்டனம்


இந்திய பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதா? ஆளும் கட்சி மந்திரிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் கண்டனம்
x
தினத்தந்தி 7 Jan 2024 8:20 AM GMT (Updated: 7 Jan 2024 9:07 AM GMT)

இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மாலி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2ம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தில் நடந்த விழாவில் புதிய விமான முனையம் உள்பட தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதன்பிறகு பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து கேரளா சென்று அங்கிருந்து லட்சத்தீவுக்கு சென்றார். இந்தியாவின் ஒருபகுதியான லட்சத்தீவின் கவரட்டி நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி லேப்டாப்கள், இருசக்கர வாகனங்கள், விவசாய கடன் அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். இதுமட்டுமின்றி லட்சத்தீவில் பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். அதன்பிறகு மறுநாளில் அந்த போட்டோக்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில், ‛‛லட்சத்தீவு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் உள்ள மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.

இந்த பதிவை பார்த்தவுடன் மாலத்தீவை ஆட்சி செய்து வரும் பிபிஎம் கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியை காட்டும் வகையிலும் பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பாக ஜாஹித் ரமீஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த நடவடிக்கை என்பது பெரியதுதான். இருப்பினும் எங்களுடன் போட்டியிடுவது என்பது ஒரு மாயை போன்றது. ஏனென்றால் நாங்கள் வழங்கும் ஆபர்களைபோல் அவர்கள் எப்படி வழங்க முடியும்? எப்படி சுத்தமாக இருக்க முடியும்? மேலும் அறைகளில் இருந்து நிரந்தரமாக வரும் கெட்ட நறுமணம் பெரிய பின்னடைவாக இருக்கும்'' என தெரிவித்தார்.

இதன்மூலம் ஜாஹித் ரமீஸ் இந்தியர்களை சுகாதாரமற்றவர்கள் எனவும், அழுக்கானவர்கள் எனவும் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கொதித்துள்ளனர். இதனால் இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும். மாறாக லட்சத்தீவு உள்ளிட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜாஹித் ரமீசு இனவெறி சார்ந்த கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் பலரும் சாடி வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவின் மந்திரியான மரியம் ஷியூனா மற்றும் ஆளும் கட்சியினர் பலர் கேலி செய்ததையடுத்து மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்துள்ளார். மந்திரி மரியம் ஷியூனா பயன்படுத்தும் மொழி "பயங்கரமானது". மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா "நெருங்கிய கூட்டாளி" என்று கூறினார்.


Next Story