இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா வெளியிட்ட கூட்டறிக்கை தேவையற்றது: அமெரிக்க துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்


இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா வெளியிட்ட கூட்டறிக்கை தேவையற்றது: அமெரிக்க துணை தூதருக்கு பாகிஸ்தான்  சம்மன்
x
தினத்தந்தி 27 Jun 2023 5:22 AM GMT (Updated: 27 Jun 2023 6:11 AM GMT)

பாகிஸ்தான் தன் நிலப்பரப்பை தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த அனுமதிக்ககூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் பாகிஸ்தான் குறித்து பேசியதற்காக விளக்கமளிக்கக்கோரி சம்மன் அனுப்பி உள்ளது.

paஇஸ்லமாபாத்,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் அரசுமுறைபயணமாக அமெரிக்கா சென்றபோது, இந்தியா-அமெரிக்கா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டதால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அமெரிக்க துணைத் தூதர் சென்றார். அப்போது அவரிடம், இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா வெளியிட்ட கூட்டறிக்கை தேவையற்றது; ஒருதலைபட்சமானது; தவறாக வழிநடத்தக்கூடியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. வரும் காலங்களில் இதுபோன்று பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுவதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நன்றாக முன்னேறி வருகிறது. பாகிஸ்தான்-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நம்பிக்கை மற்றும் புரிதலை மையமாகக் கொண்ட ஒரு சூழல் இன்றியமையாதது" என்று பாகிஸ்தான் வெளியுறவுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,

"பிராந்தியம் முழுவதும் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. பல ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்களால் பாகிஸ்தான் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் போர் நிறுத்தத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் கடைப்பிடித்து வருவதற்காக இரு நாடுகளையும் அமெரிக்கா பாராட்டுகிறது.

அதேநேரத்தில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அவர்களின் பல்வேறு முன்னணி அமைப்புகள் உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் பாகிஸ்தான் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான உரையாடலில் நாங்கள் விவாதித்தபடி, பரஸ்பர பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா தொடர்ந்து இணைந்து பணியாற்றும்" என்று தெரிவித்தார்.


Next Story