டீயில் விஷம், கொலை முயற்சி - கணவர்; உங்களை அல்ல, எறும்புகளை கொல்ல என மனைவி தரப்பு கோர்ட்டில் வாதம்


டீயில் விஷம், கொலை முயற்சி - கணவர்; உங்களை அல்ல, எறும்புகளை கொல்ல என மனைவி தரப்பு கோர்ட்டில் வாதம்
x
தினத்தந்தி 13 April 2023 12:45 PM GMT (Updated: 13 April 2023 12:48 PM GMT)

அமெரிக்காவில் டீயில் விஷம் வைத்து கொல்ல முயற்சி என கணவர் தொடுத்த வழக்கில் அது எறும்புகளை கொல்ல என மனைவி தரப்பு வழக்கறிஞர்கள் கோர்ட்டில் கூறியுள்ளனர்.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் யூ எமிலி யூ. ஆரஞ்ச் கவுன்டி பகுதியில், தோல் சிகிச்சை டாக்டராக இருந்து வருகிறார். இவரது கணவர் ஜாக் சென்.

இந்த நிலையில், மனைவி எமிலி மீது கணவர் ஜாக் கோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டுடன் வழக்கு ஒன்றை தொடுத்து உள்ளார். அதில், தனக்கு வழங்கிய தேநீரில் (டீ) 3 வெவ்வேறு தருணங்களில் எமிலி விஷம் கலந்து உள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு எமிலியை போலீசார் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர். ஜாக், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் தனது டீயில் ஏதோ கலக்கப்படுகிறது என சந்தேகம் அடைந்து உள்ளார்.

அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதும் டாக்டரை அணுகி உள்ளார். இதில், அவருக்கு வயிற்றில் இரண்டு அல்சர் பாதிப்பு, வயிற்றில் உட்புற சுவரில் எரிச்சல் மற்றும் வயிற்று வலி, தொண்டை முதல் வயிறு வரையில் எரிச்சல், வலி உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை டாக்டர் கண்டுபிடித்து கூறியுள்ளார்.

இந்த மருத்துவ தகவல் அடிப்படையில் மற்றும் டீ குடிக்கும்போது ஏற்பட்ட ரசாயன மாற்றம் ஆகியவற்றை வைத்து யோசித்து பார்த்த அவர், மனைவியின் செயல்களை படம் பிடிக்க சமையலறையில் கேமிராக்களை வைத்து உள்ளார்.

அதில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11, ஜூலை 18 மற்றும் ஜூலை 25 என 3 முறை, சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற பயன்படுத்த கூடிய திரவம் ஒன்றை பாட்டிலில் இருந்து, டீயில் அதனை ஊற்றும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது டிரேனோ என்ற கழிவுநீர் அடைப்பை அகற்ற பயன்பட கூடியது.

இந்த வீடியோ பதிவையும் ஜாக் கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளார். இதனை தொடர்ந்து, ஆரஞ்ச் கவுன்டி கோர்ட்டு நீதிபதி, கடந்த 5-ந்தேதி எமிலியை சட்டப்படி குற்றச்சாட்டுக்கு உரியவராக அறிவித்து உள்ளார்.

ஆனால், எமிலியின் வழக்கறிஞர்களான சைமன்ஸ் மற்றும் துவாராகவுஸ்கி ஆகியோர் கோர்ட்டில் கூறும்போது, டீயில் எங்களது கட்சிக்காரர், டிரேனோவை 3 முறை ஊற்றினார். உண்மை. ஆனால் எதற்கு...? எறும்புகளை கொல்ல என கூறியுள்ளனர்.

ஆனால், ஜாக்கின் வழக்கறிஞர் ஸ்டீவ் ஹிட்டல்மேன் கூறும்போது, அந்த வீட்டில் எறும்பு தொல்லையே இல்லை என கூறியுள்ளார். டீயில் இருந்து எறும்புகளை நீக்க வேண்டும் என்பதற்காக, அதில் டிரேனோவை கலப்பது என்பது முதன்முறையாக நான் கேள்விப்படுகிறேன் என்றும் ஸ்டீவ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மனைவி எமிலியிடம் இருந்து ஜாக் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அதுபற்றிய உத்தரவை பிறப்பிக்கும்படியும் கோர்ட்டில் வேண்டுகோளாக கேட்டு உள்ளார்.

எனினும், கேமிராக்களை மறைத்து வைத்து விட்டு, எமிலியை டீயில் திரவம் ஒன்றை கலக்கும்படி ஜாக் செட்அப் செய்து உள்ளார். அதன்பின்பு, அதனை விஷம் என்று கூறுகிறார் என்றும் வழக்கறிஞர் சைமன்ஸ் கூறியுள்ளார்.

தேநீரின் மாதிரியை இர்வின் காவல் துறையிடம் ஜாக் கொடுத்து உள்ளார். அதனை எப்.பி.ஐ. அதிகாரிகள் பரிசோதனை செய்து அதில் டிரேனோ திரவம் கலக்கப்பட்டு உள்ளது என உறுதி செய்து உள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.


Next Story