சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி 65 ஆக உயர்வு

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது.
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி 65 ஆக உயர்வு
Published on

பீஜிங்,

சீனாவில் கொரோனா பாதிப்புகள், வெப்ப அலை பரவல் ஆகியவற்றால் மக்கள் தவித்து வரும் சூழலில் அந்நாட்டின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இதனால், பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. நில சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.

நிலநடுக்கத்திற்கு பின்னர் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டு உள்ளன. பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். பலர் பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு ஓடி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலநடுக்கம் 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்தது. சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு விதித்த தடையை அடுத்து 2.1 கோடி மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்த செங்டுவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் லூடிங் கவுன்டியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த பகுதியில் அதிகாரிகள் பல பசுமை வழிகளை ஏற்படுத்தி, மீட்பு பணியாளர்கள் லூடிங் பகுதிக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் வழி ஏற்படுத்தி தந்துள்ளனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்திற்கு உயிரிழப்பு 65 ஆக உயர்ந்து உள்ளது. 248 பேர் காயமடைந்து உள்ளனர். 12 பேரை காணவில்லை.

இவர்களில் 37 பேர் லூடிங் கவுன்டியின் கார்ஜே திபெத்திய சுயாட்சி பகுதியிலும் மற்றும் யான் நகரில் 28 பேரும் உயிரிழந்து உள்ளனர். நிலநடுக்கம் எதிரொலியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் ரிக்டரில் 3.0 அளவிலான மொத்தம் 10 நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. ஷிமியான் விரைவு சாலையில் 20 மேலாளர்கள் மற்றும் 336 கட்டுமான தொழிலாளர்கள் என 350 பேர் வரை பரிதவித்த நிலையில் நின்றனர்.

நிவாரண பணி மேற்கொள்ள வசதியாக விரைவு சாலை வழியே செல்ல 700 சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

1,900-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆயுத போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலநடுக்கம் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இன்று காலையில் இருந்து அவர்கள் காயமடைந்தவர்களை மீட்கும், சாலையை சீரமைக்கும், பாதிக்கப்பட்டோரை தேடும் மற்றும் பிற மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com