விடைபெற்ற இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்த பொறியாளர் - வைரலாகும் புகைப்படம்


விடைபெற்ற இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்த பொறியாளர் - வைரலாகும் புகைப்படம்
x

Image Courtesy : AFP 

பொறியாளர் கியோங் ஜங் என்பவர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் உள்ள மக்களால் 2 தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இது நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டு விடைபெற்றது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகமானதில் இருந்து வங்கிகள், ஐடி நிறுவனங்கள் உள்பட பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக அது இருந்தது. 2005 ஆம் ஆண்டுகளில் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்த முடிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்தது

அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் உள்கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பயனாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடிப்படை பயன்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தென் கொரியாவின் தெற்கு நகரமான கியோங்ஜு-யை சேர்ந்த பொறியாளர் கியோங் ஜங் என்பவர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்துள்ளார். அதில் "மற்ற பிரவுசர்களை பதிவிறக்குவதற்கு அது ஒரு நல்ல கருவியாக இருந்தது" என எழுதப்பட்டுள்ளது. அந்த கல்லறையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story