பிரதமரான பின் சிறிய பிளாட்டில் குடியேறும் பல ஆடம்பர பங்களாக்களுக்கு அதிபதியான ரிஷி சுனக்


பிரதமரான பின் சிறிய பிளாட்டில் குடியேறும் பல ஆடம்பர பங்களாக்களுக்கு அதிபதியான ரிஷி சுனக்
x

இங்கிலாந்து பிரதமரான பின் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் சிறிய பிளாட்டில் குடியேற உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.லண்டன்,


இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயதேயான இந்து ஒருவர், இங்கிலாந்தின் இளம் பிரதமராகி உள்ளார் என்ற பெருமையை சுனக் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை சந்தித்து பேசினார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்தார்.

இங்கிலாந்து பிரதமரான பின்னர், ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் குடியேற இருக்கிறார். இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் பெண் செயலாளர் கூறும்போது, எண்.10 டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள சிறிய பிளாட்டில் அவர் தனது குடும்பத்துடன் குடியேற உள்ளனர்.

எனினும், அந்த பிளாட்டை அவர்கள் மீண்டும் புதுப்பிக்க உள்ளனரா மற்றும் அலங்கரிக்க உள்ளனரா? என்பது பற்றிய விவரங்கள் தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

இதற்கு முன்பு பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சன் இந்த பிளாட்டுக்கு அடுத்து இருந்த எண்.11 டவுனிங் ஸ்ட்ரீட்டில் இருந்த வீட்டை அலங்காரம் செய்ய மற்றும் ஆடம்பர வசதிகளுடன் கூடிய வீடாக மாற்ற அதிக செலவுகளை இழுத்து வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதுபற்றி பத்திரிகைகளில் பல கட்டுரைகளும் அவரை சாடி வெளிவந்தன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழலில், அவரது அமைச்சரவை மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர் பதவி விலக நேர்ந்தது.

இந்நிலையில், டவுனிங் ஸ்ட்ரீட்டில் எண்.10 பிளாட் ஆனது முக்கிய பகுதியில் இருந்தபோதும், அது சற்று சிறிய குடியிருப்பு என கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் தலைவர்கள், எண்.10 பிளாட்டுக்கு மேலே உள்ள பிளாட்டில் பாரம்பரியப்படி வசிப்பது வழக்கம்.

அந்த முக்கிய கட்டிடம் பிரதமரின் அரசு இல்லம் மற்றும் அதிகாரப்பூர்வ அலுவலகம் ஆகவும் செயல்படுவது வழக்கம். சுனக்குடன் அவரது செல்ல பிராணி லேப்ரடார் நாயும் செல்கிறது.

இந்த தம்பதிக்கு மொத்தம் ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி (ரூ.6,960.39 கோடி) மதிப்பில் சொத்துக்கள் உள்ளன என தி சண்டே டைம்ஸ் பத்திரிகை பணக்காரர்கள் பற்றிய பட்டியலில் குறிப்பிட்டு உள்ளது.

ஒரு வகையில், இது இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பினை விட மிக அதிகம் என்ற சர்ச்சையும் முன்பு எழுந்தது. இதனால், பிரதமர் பதவிக்கான போட்டியில் சுனக் பின்னடைவை சந்திக்க கூடும் என்றும் கூறப்பட்டது.

ரிஷி சுனக்கிற்கு கலிபோர்னியாவில் ஆடம்பர பென்ட்ஹவுஸ் ஒன்றும், இங்கிலாந்தின் லண்டன் நகரில் கென்சிங்டன் மாவட்டத்தில் குடியிருப்பு ஒன்றும், இங்கிலாந்தின் வடக்கே யார்க்ஷைர் தொகுதியில் மேன்சன் ஒன்றும் உள்ளது.

அவரது இந்த சிக்கன நடவடிக்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து இங்கிலாந்து விடுபடுவதற்கான முதல் முயற்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Next Story