கிரீமியா பகுதிக்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்


கிரீமியா பகுதிக்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்
x

ரஷியா தன்னுடன் இணைத்து கொண்ட கிரீமியா தீபகற்ப பகுதிக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.



மாஸ்கோ,


உக்ரைனுடனான போரானது ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவுடன் சட்டவிரோத வகையில் இணைக்கப்பட்ட கிரீமிய தீபகற்ப பகுதிக்கு, ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கிரீமிய தீபகற்ப பகுதியில், 2018-ம் ஆண்டு புதிய பாலம் ஒன்று ரஷிய அதிபர் புதினால் உருவாக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம் ஆனது ரஷியாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2020-ம் ஆண்டு முழு அளவில் இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த பாலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அதன்பின்னர் அது சரி செய்யப்பட்டது.

இந்த சூழலில், ரஷியாவுடன் சட்டவிரோத வகையில் இணைக்கப்பட்ட கிரீமியா தீபகற்ப பகுதிக்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இதுபற்றி அதிபரின் செய்தி தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, ரஷியாவுடன் கிரீமியா இணைக்கப்பட்ட 9-வது ஆண்டு நாளை முன்னிட்டு கலாசார மற்றும் வரலாற்று நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே அதிபர் புதின் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அவர் நேரடியாக அந்த பகுதிக்கு சென்றது ஒவ்வொருவரையும் ஆச்சரியமடைய செய்து உள்ளது என கூறியுள்ளார்.

கிரீமியா பகுதியில் மார்ச் 18-ந்தேதி நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் புதின் கலந்து கொள்வது வழக்கம். இந்த நாளில் மாஸ்கோ நகரில் உள்ள லுஜ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வது வழக்கம்.

பொது மக்களுடனான சிறப்பு கூட்டங்களை நடத்துவதுடன், தனிப்பட்ட முறையில் கிரீமியா பகுதிக்கு சென்று பார்வையிடுவதும் வழக்கம்.

கடைசியாக 2020-ம் ஆண்டு ஜூலையில் அந்த பகுதிக்கு புதின் சென்றார். அதன்பின்பு, கிரீமியா பாலத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் அதனை பழுது நீக்கி சரி செய்த பின்னர், 2022-ம் ஆண்டு டிசம்பரில் கிரீமியா பகுதிக்கு அவர் சென்றார்.

ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்ற நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில், கிரீமியா பகுதிக்கான அவரது பயணம் அமைந்து உள்ளது.


Next Story