காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: ஒபாமா எச்சரிக்கை


காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்:  ஒபாமா எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2023 7:06 AM GMT (Updated: 24 Oct 2023 9:42 AM GMT)

காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. 2 முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒபாமா சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இடையேயான மோதலை குறிப்பிட்டார். அவர் பேசும்போது, போரில் மனித உயிரிழப்பு நிகழ்வை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையானது, எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, சிறை பிடித்து வைக்கப்பட்ட ஒரு மக்களுக்கான (காசா) உணவு, நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை நிறுத்துவது என்ற இஸ்ரேல் அரசின் முடிவானது, வளர்ந்து வரும் மனிதநேய நெருக்கடியை மோசமடைய செய்வதுடன், பல தலைமுறைகளாக பாலஸ்தீனர்களின் சிந்தனைகளை இன்னும் கடினம் ஆக்கிவிடும்.

இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவையும் மெல்ல அழித்து விடும். போரின் போக்கும் இஸ்ரேலின் எதிரிகளின் கைகளுக்கு சென்று விடும். அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளை வலுவிழக்க செய்து விடும் என அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள ஒபாமா, இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று அந்நாட்டுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எனினும், இதுபோன்ற போர்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த அறிக்கையை வெளியிடும் முன், அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, எட்டு ஆண்டுகளாக துணை அதிபராக பதவி வகித்த ஜோ பைடனிடம் இதுபற்றி முன்பே பேசினாரா? என்ற விவரங்கள் தெரிய வரவில்லை.


Next Story