தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்க வேண்டும் - தைவான் அதிபர் வேண்டுகோள்!


தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்க வேண்டும் - தைவான் அதிபர் வேண்டுகோள்!
x

தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச ஆதரவை வழங்க தைவான் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தைபே,

தைவான் தனி பிராந்தியம் இல்லை சீனாவின் ஒரு அங்கம் ஆகும், என்ற நிலைப்பாட்டை சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது.

அதே வேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை கடந்த 1-ந்தேதி தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் எதிர்ப்பையும் மீறி, நான்சி பெலோசி விமானம் மூலம் தைவானுக்குச் சென்றார்.

நான்சி பெலோசியின் வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது தைவான் எல்லை அருகே சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தைவானின் எல்லைப்பகுதி அருகே சீன ராணுவம் அதிநவீன ஏவுகணைகளை வீசி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தைவான் நாட்டின் முக்கிய தீவு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த சீனா தயாராகி விட்டதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் பல்வேறு போர்க்கப்பல்களும், ராணுவ விமானங்களும் தங்கள் எல்லைக்குள் நுழைந்திருப்பதாக தைவான் அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவை வழங்க தைவான் அதிபர் சாய் இங்-வென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "தைவான் அரசும் ராணுவமும் சீனாவின் இராணுவப் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. தேவையான பதிலடி நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளன.

தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவை கேட்டுக்கொள்கிறேன்" என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் தெரிவித்தார்.


Next Story