செவ்வாய் கிரகத்தின் 'டீமோஸ்' நிலவை அழகாக படம் பிடித்த 'ஹோப்' விண்கலம்


செவ்வாய் கிரகத்தின் டீமோஸ் நிலவை அழகாக படம் பிடித்த ஹோப் விண்கலம்
x

அமீரகத்தின் ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சிறிய நிலவான டீமோசை அழகாக படம் பிடித்துள்ளது.

இந்த படத்தை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கூறுகையில், ''நமது பங்களிப்பு பெருமிதம் அடையும் வகையில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

ஹோப் விண்கலம்

செவ்வாய் கிரகத்திற்கு போபோஸ் மற்றும் டீமோஸ் ஆகிய 2 நிலவுகள் உள்ளன. போபோஸ் எனப்படுவது பெரிய நிலவாகும். அதற்கு அடுத்தபடியாக டீமோஸ் என்ற நிலவு உள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய நிலவாக இரண்டும் கருதப்படுகிறது.

தற்போது அமீரகம் சார்பில் செலுத்தப்பட்டுள்ள ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்து வருகிறது. இதில் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 20 ஆயிரம் கி.மீ. உயரத்தில் இருந்தபடி ஹோப் விண்கலம் சுற்றி வருகிறது.

டீமோஸ் நிலவு

இந்த விண்கலம் அனுப்பி வரும் புகைப்படங்கள் மற்றும் வளிமண்டலம் குறித்த தகவல்கள் செவ்வாய் கிரக ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் மர்மமான டீமோஸ் என்ற சிறிய நிலவை 100 கி.மீ. உயரத்தில் இருந்து துல்லியமாகவும், அழகாகவும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும்போது இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. 6.2 கி.மீ. விட்டம் கொண்ட இந்த நிலவு செவ்வாய் கிரகத்தில் இருந்து 23 ஆயிரத்து 460 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த கிரகத்தை டீமோஸ் நிலவு 30½ மணி நேரத்திற்கு ஒருமுறை சுற்றி வருகிறது. தற்போது இதன் புகைப்படத்தை ஹோப் விண்கலம் மிக அழகாக எடுத்து அனுப்பியுள்ளது.

இதில் ஒழுங்கற்ற உருவத்தில் ஒரு பாறாங்கல் போன்று செவ்வாய் கிரகத்தின் பின்புலத்தில் டீமோஸ் தெரிகிறது. புகைப்படங்களை விண்வெளி ஆர்வலர்கள் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதன் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறியிருப்பதாவது:-

இளம் விஞ்ஞானிகளுக்கு பெருமை

அமீரகத்தின் செவ்வாய் கிரக ஆய்வு திட்டம் உலகளாவிய அளவில் ஒரு முன்னோடியான ஆய்வாக விளங்கி வருகிறது. செவ்வாய் கிரகத்தின் நிலவான டீமோசில் இருந்து 100 கி.மீ. தொலைவில் புகைப்படம் மனிதர்களால் தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த நிலவானது செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள சிறு கோள் (அஸ்ட்ராய்டு) என சில அறிவியல் கோட்பாடுகள் கூறுகின்றன.

இதனை நிரூபிப்பதற்காக ஹோப் விண்கலம் தனது உபகரணங்கள் மூலம் மிக துல்லியமாக படம் பிடித்துள்ளது. இந்த நிலவு செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனவும், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அதில் இருந்து உடைந்து பிரிந்தது எனவும் நிரூபிக்கும் வகையில் இதன் தகவல்கள் உள்ளது. நமது இளம் விஞ்ஞானிகளுக்கு இது பெருமையளிப்பதாக உள்ளது. மேலும் நமது அறிவியலுக்கும், மனித அறிவாற்றல் அணிவகுப்பில் நமது பங்களிப்பு குறித்து பெருமிதம் அடையும் வகையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story