நடைப்பயிற்சி சென்ற நபருக்கு திடீர் மாரடைப்பு - உயிரை காப்பாற்றிய‛ஸ்மார்ட் வாட்ச்' எப்படி?


நடைப்பயிற்சி சென்ற நபருக்கு திடீர் மாரடைப்பு - உயிரை காப்பாற்றிய‛ஸ்மார்ட் வாட்ச் எப்படி?
x
தினத்தந்தி 10 Nov 2023 12:00 AM GMT (Updated: 10 Nov 2023 12:44 AM GMT)

விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளை நாம் அணியும்போது இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றம், உடலில் ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவற்றை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

லண்டன்,

தற்போது அனைவரும் ஸ்மார்ட் வாட்ச்சுகளை பயன்படுத்த தொடங்கி உள்ளோம். இந்த ஸ்மார்ட் வாட்ச் என்பது நேரம் பார்ப்பதற்கு மட்டுமின்றி நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடித்து அலார்ட் செய்யும் உயிர் காக்கும் வாட்ச்சாகவும் செயல்பட்டு வருகிறது.

அதாவது ஆப்பிள் உள்ளிட்ட பிற விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளை நாம் அணியும்போது இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றம், உடலில் ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவற்றை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் ஸ்மார்ட் வாட்ச் நம்மை அலர்ட் செய்யும். இத்தகைய அலர்ட் மூலமாக ஸ்மார்ட் வாட்ச் என்பது பலரது உயிரை காப்பாற்றி வருவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம்.

இந்நிலையில்தான் தற்போது இங்கிலாந்தில் ஒருவரின் உயிரை ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றி உள்ளது. அவர் யார்? அவரது உயிரை ஸ்மார்ட் வாட்ச் எப்படி காப்பாற்றியது? என்பது பற்றிய விவரம் வருமாறு:

இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சியின் மோரிஸ்டன் பகுதியில் வசித்து வருபவர் பால் வாபம். இவர் ஹாக்கி வேல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவர் தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்தான் அவர் வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்றார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரெனமாரடைப்பு ஏற்பட்டது. அதாவது அவரது மார்பு பகுதியில் திடீரென்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் மார்பு பகுதி இறுக்கமாக மாறியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்தில் விழுந்தார். இதையடுத்து அவர் தனது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார். அவரது மனைவி அங்கிருந்து சிறிது தொலைவிலேயே இருந்தார்.

இதையடுத்து அவர் விரைந்து வந்து கணவர் பால் வாபம்மை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது இதயத்துக்கான ரத்த குழாயில் அடைப்பு இருப்பதும், அதனால் மாரடைப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அடைப்பை சரிசெய்வதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் நலமாக உள்ளார். இந்நிலையில்தான் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது என்ன நடந்தது? என்பது பற்றி பால் வாபம் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

நான் வழக்கம்போல் காலை 7 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அப்போது மார்பு பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டது. இந்த வேளையில் எனது ஸ்மார்ட் வாட்ச் மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து வரவழைத்து உயிர் பிழைத்தேன். ஸ்மார்ட் வாட்ச் இல்லாவிட்டால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்றார்.


Next Story