போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவில் ரஷியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

அசோவ் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் பெரிய போர் விமானம் விழுந்து தீப்பிடித்த காட்சியை உக்ரைன் ஊடகங்கள் வெளியிட்டன.
போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவில் ரஷியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்
Published on

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. மூன்றாம் ஆண்டாக போர் தொடர உள்ள நிலையில், போர்க்களத்தின் முன் வரிசையில் போராடி வரும் உக்ரைனுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. அதாவது, ரஷியாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் நேற்று சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் ராணுவ விடுமுறையின்போது அந்த நாட்டின் ஏ-50 என்ற விமானத்தை வீழ்த்துவதற்கு உதவிய உக்ரைனின் ராணுவ உளவுத்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக ராணுவ தளபதி மைகோலா ஓலேஷ்சுக் கூறி உள்ளார். மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா நேற்று பிற்பகல் நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், போர் பற்றி பேசியபோது, வான்வழித் தாக்குதல் நடப்பதாகவும், தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதாகவும் கூறினார். இதில், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அசோவ் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் பெரிய போர் விமானம் விழுந்து தீப்பிடித்த காட்சியை உக்ரைன் ஊடகங்கள் வெளியிட்டன.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறியது குறித்து ரஷிய ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் கிராஸ்னோடர் பிராந்தியத்தில் உள்ள அவசரகால பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவித்தனர். பல ரஷிய ராணுவ வலைப்பதிவர்கள் விமானம் விழுந்ததை உறுதி செய்தனர். ரஷிய படை நடத்திய தாக்குதலில், எதிர்பாராதவிதமாக இந்த விமானம் மீது குண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

உக்ரைனின் தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், ரஷியா ஒரு மாதத்தில் இழந்த இரண்டாவது விமானம் இதுவாக இருக்கும். இதற்கு முன்பு, ஜனவரி 14ம் தேதி அசோவ் கடற்பகுதியில் ஏ-50 விமானத்தை வீழ்த்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com