வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஊழியர் பணிநீக்கம்- நிறுவனத்துக்கு அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு


வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஊழியர் பணிநீக்கம்- நிறுவனத்துக்கு அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 12 Oct 2022 11:26 AM GMT (Updated: 12 Oct 2022 11:28 AM GMT)

வேலை நேரத்தில் வெப்கேம் ஆன் செய்யாத ஊழியரை பணிநீக்கம் செய்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்டர்டம்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனம் சேட்டு. இந்நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்று நெதர்லாந்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் ஊழியராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

இவர் வேலைக்குச் சேர்ந்து சுமார் ஒரு வருடம் கழித்து அந்த ஊழியருக்கு ஆன்லைன் வழி மெய்நிகர் பயிற்சிக் காலத்தில் கலந்துகொள்ளுமாறு நிறுவனம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த பயிற்சி காலத்தின் போது ஊழியர்களைக் கண்காணிக்கவும், திறன் மேம்பாட்டு அளவை கணக்கிடவும் ஒரு நாளுக்கு 8 மணிநேரமும் ஊழியரை நேரடி கண்காணிப்பில் வைக்க சேட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி நிறுவன ஊழியர்கள் ஒரு நாளில் தங்கள் 8 மணிநேர பணி நேரத்தின் போது வெப்கேம்-ஐ ஆன் செய்திருக்க வேண்டும், இதேபோல் அவர்கள் பணியாற்றும் டிஜிட்டல் ஸ்க்ரீன்-ஐயும் பகிர வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கணினியின் ஸ்க்ரீன்-யை பகிர சொல்வது சரி, ஆனால் வெப் கேம் ஆன் செய்ய வேண்டும் என்ற நிறுவனத்தின் இந்த விதிமுறையைப் பின்பற்ற முடியாது என அந்த நெதர்லாந்து ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த நிறுவனம் நெதர்லாந்தை சேர்ந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் நியாயமற்ற முறையில், தான் பணிநீக்கம் செய்யப்பட்டதற்காக அந்த ஊழியர் நெதர்லாந்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கோர்ட்டு, பணியிடத்தில் ஒரு ஊழியரை வீடியோ கண்காணிப்பு செய்வது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதாகும் என தெரிவித்தது. மேலும் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை வெப் கேமராவை ஆன் செய்ய சொல்வது மனித உரிமை மீறலாகும் என கோர்ட்டு தெரிவித்தது.

இதுமட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட நெதர்லாந்து ஊழியருக்கு சேட்டு நிறுவனம் சுமார் 72 ஆயிரத்து 700 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 59 லட்சம்) அபராதமாக அளிக்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


Next Story