செங்கடல் தாக்குதல்கள்: இந்திய-அமெரிக்க வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை


செங்கடல் தாக்குதல்கள்: இந்திய-அமெரிக்க வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை
x

செங்கடலில் சுதந்திரமான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் விவாதித்தனர்.

முனிச்:

செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். கப்பல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால், கப்பல் நிறுவனங்கள் அந்த வழித்தடங்களில் கப்பல்களை இயக்குவதற்கு அச்சப்படும் நிலை உள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக கூறுகின்றனர். போரை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் ஆகியோர் ஜெர்மனியில் சந்தித்து பேசினர்.

செங்கடலில் கடல்சார் பாதுகாப்பிற்கான அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அணுகுமுறைகள் பரஸ்பரம் வலுப்படுத்துவதாகவும், பிராந்தியத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிளிங்கன் கூறியிருக்கிறார்.

மேலும், செங்கடலில் சுதந்திரமான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தற்போதைய பணிகள் குறித்தும் விவாதித்தனர்.

ஜெர்மனியின் முனிச் பாதுகாப்பு மாநாட்டின் இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story