உளவு பலூன், உக்ரைன் விவகாரம் பற்றி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை; சீனா பதிலடி


உளவு பலூன், உக்ரைன் விவகாரம் பற்றி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை; சீனா பதிலடி
x

சீனாவுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை, அந்நாடு பெரிய மற்றும் வலுவானது என வெளிப்படுத்துவதற்கு மாறாக நாங்களே பெரியவர்கள் என்று விவரிப்பது போல் உள்ளது என சீன தூதர் வாங் அதிரடியாக கூறியுள்ளார்.



வாஷிங்டன்,


ஜெர்மனி நாட்டில் முனிச் பாதுகாப்பு மாநாடு நடந்தது. இதில், பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், சீனாவின் தூதரான வாங் யி உடன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, அமெரிக்காவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறல் ஏற்று கொள்ள முடியாதது என சீன தூதரிடம் நேரடியாகவே அமெரிக்க வெளியுறவு மந்திரி பேசினார்.

அமெரிக்காவின் வான்வெளியில் கடந்த சில வாரங்களுக்கு முன் சீனாவின் உளவு பலூன் பறந்தது என்ற சர்ச்சை கிளம்பியது. அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்து உள்ளது என சீனா கூறியது.

எனினும், இதனை உளவு பலூன் என்றே அமெரிக்கா கூறியது. தொடர்ந்து அதனை சுட்டு வீழ்த்தியது. அதன் பாகங்களை கைப்பற்றி ஆய்வும் செய்து வருகிறது. தொடர்ந்து 2-வது முறையாக அத்துமீறிய மர்ம பொருளையும் வாஷிங்டன் சுட்டு வீழ்த்தியது.

இதன் தொடர்ச்சியாக கனடாவிலும் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமான படையினர் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இதுபோன்ற பொறுப்பற்ற செயல் ஒருபோதும் மீண்டும் நடக்க கூடாது என்று சீனாவிடம் கோடிட்டு காட்டப்பட்டது என்று நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

சீன தூதருடனான இந்த சந்திப்பின்போது, 5 கண்டங்கள் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறி இதுபோன்ற உளவு பலூன் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருவது உலக நாடுகளுக்கு தெரிய வந்து உள்ளது என பிளிங்கன் கூறியதுடன், எங்களுடைய இறையாண்மையை மீறும் எந்தவொரு செயலையும் அமெரிக்கா பொறுத்து கொண்டு இருக்காது என தெளிவுப்பட கூறியுள்ளார்.

இந்த உளவு பலூன் விவகாரம் தெரிய வந்ததும், சீனாவுக்கு செல்லும் பிளிங்கனின் பயணம் ஒத்தி போடப்பட்டது. சீன தூதருடன் நடந்த சந்திப்பில் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரம் பற்றியும் எழுப்பப்பட்டது.

ரஷியாவுக்கு ஆயுதம் உள்ளிட்ட ஆதரவை சீனா வழங்கினால், பொருளாதார தடை உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும் என பிளிங்கன் எச்சரிக்கை விடும் வகையில் கூறியுள்ளார் என பிரைஸ் தெரிவித்து உள்ளார். சீனாவுடனான புதிய பனிப்போர் ஏற்பட விரும்பவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

எனினும், ஜெர்மனியின் முனிச் மாநாட்டில் சீன தூதர் வாங் கூறும்போது, அமெரிக்காவின் இந்த செயல், அது பெரிய மற்றும் வலுவானது என்று வெளிப்படுத்தவில்லை. மாறாக அதற்கு எதிராக உள்ள நாங்களே பெரியவர்கள் என்று விவரிப்பது போன்று உள்ளது என வாங் அதிரடி காட்டி பேசியுள்ளார்.


Next Story