பாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை


பாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
x

பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி தெரிவித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட ரகசிய செய்தி பொதுவெளியில் கசிந்தது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி டொனால்டு லூ, நாடாளுமன்ற குழுவிடம் எழுத்துப்பூர்வமாக சாட்சியம் அளித்தார்.

அதில் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் என்ன மாதிரியான முறைகேடுகள் நடந்தன என்பதை விவரிக்காத அவர், தேர்தல் மோசடி புகார்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் தேர்தலின் போது அரங்கேறிய வன்முறைகள், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள், ஊடகத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வாக்குப்பதிவின் போது இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையின் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானுடன் 76 ஆண்டுகால நட்புறவை நாங்கள் கொண்டுள்ளோம். பாகிஸ்தான் அதன் சொந்த அரசியலமைப்பை நிலைநிறுத்தும் ஒரு ஜனநாயக செயல்முறை முறையாக இல்லை என்றால் அது எங்கள் இரு நாடுகளின் உறவுக்கு ஒரு தடையாக இருக்கும் " என்று வெளியுறவுத்துறை துணை மந்திரி டொனால்டு லூ எச்சரிக்கை விடுத்தார்.


Next Story