ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு எச்சரிக்கை


ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு எச்சரிக்கை
x

ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தெஹ்ரான்,


ஈரான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை சாரா காதெம் (வயது 25). சமீபத்தில் கஜகஸ்தான் நாட்டின் அல்மேட்டி நகரில் நடந்த சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் அவர் கலந்து கொண்டார்.

ஆனால், அவர் விளையாடும்போது, ஹிஜாப் அணியவில்லை என கூறப்படுகிறது. ஈரான் நாட்டு அரசின்படி, ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தனிப்பட்ட நபர்களிடம் இருந்து தொலைபேசி வழியே மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.

நாட்டுக்கு திரும்பி வர கூடாது என்ற வகையில் அவருக்கு அச்சுறுத்தல்கள் விடப்பட்டன. அவர்களில் சிலர், நாட்டுக்கு திரும்பி வரவேண்டும் என்றும் உங்களுடைய பிரச்சனை என்னவென்றாலும் தீர்க்கப்படும் என உறுதியும் அளித்துள்ளனர்.

ஈரானில் வசிக்கும் சாராவின் பெற்றோருக்கும் மிரட்டல்கள் விடப்பட்டு உள்ளன என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது. இதனை தொடர்ந்து, சாரா ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். எனினும், இந்த விவகாரத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சகம் எதனையும் தெரிவிக்கவில்லை.

ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியாததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். 3 நாட்களில் போலீஸ் காவலில் அவர் உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டமும் வெடித்தது.


Next Story